நடிகர் அஜீத்குமார் நடித்த படம் தீனா. கடந்த 2001ம் ஆண்டில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. அஜீத்குமார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தீனா. இந்த படத்தில் லைலா, நாயகியாக நடித்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
கடந்த 2001ம் ஆண்டில், ஜனவரி 14ம் தேதி வெளியான இந்த படத்தில்தான், மகாநதி சங்கர் ஒரு காட்சியில் தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது, நீ பாடு தல என்று அஜீத்குமாரை பார்த்து சொல்வார். அதன் பிறகுதான் அஜீத்குமாருக்கு தல என்ற பட்டப் பெயரே உருவானது. விஜய்க்கு தளபதி போல அஜீத்குமாருக்கு தல என்பது தமிழ் சினிமாவில் பிரபலமானது.
இந்த படத்தில் அஜீத்குமாரின் அண்ணன் கேரக்டரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சமஸ்தானம், ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுரேஷ் கோபியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது. ஐ படத்தில் வில்லன் நடிப்பிலும் சுரேஷ் கோபி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்திற்கு பிறகுதான், ஆக்ஷன் ஹீரோவாக நடிகர் அஜீத்குமாருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்துக்கு பிறகுதான், காதல் படங்களில் இருந்து அதிரடி ஆக்சன் படங்களுக்கு மாறினார். இன்று வரை அவர் அதிரடி நாயகனாக மாறி நடித்து வருகிறார். இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர்ந்து குட்பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் பிரசாந்த் தான். இதுகுறித்து அவரது தந்தை தியாகராஜன் சமீபத்தில் நேர்காணலில் பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பதாக தான் இருந்தது. என்னிடம்தான் முதலில் தீனா படத்தின் கதையை சொன்னார். ஆனால் அப்போது பிரசாந்த் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால், அந்த படத்தில் நடிக்க உடனே ஓகே சொல்ல முடியவில்லை. ஆனால் உடனே அவர் படம் எடுக்க வேண்டும் என்றார். அதனால் அந்த படம் மிஸ் ஆனது, என்று கூறியிருக்கிறார்.





