இந்திய சினிமாவில் தனது திரைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தெலுங்கு மொழி இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பான் இந்தியா படங்களாக உள்ளன.
இந்திய சினிமாவில் பாகுபலி படம் 2 பாகங்களாக வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அதுவரை 2 பாகங்களாக தமிழில் படங்கள் வெளிவராத நிலையில் பாகுபலி வெற்றிக்கு பின்புதான் பல படங்கள் 2 பாகங்களாக உருவாகி வெளியாகின. 2 பாகங்களாக படங்களை உருவாக்கும் துணிச்சலை இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு தந்ததே பாகுபலி படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி என்ற திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மொழி கண்ணாமூச்சி ஏனடா சத்தம் போடாதே இராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பெரிய வரவேற்பை பெற்றவர் பிருத்விராஜ்.
இந்நிலையில் வாரணாசி படப்பிடிப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பேசிய பிரித்விராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் கூறுகையில், வாரணாசி பின்னணியில் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அந்த காட்சியை மட்டும் சரியாக கொண்டு வருவதற்காக சுமார் 90 முறை ரீ டேக் எடுக்க வேண்டி இருந்தது.
காட்சி முழுமை பெறுவதற்காக இயக்குனர் ராஜமௌலி எவ்வளவு பொறுமையுடனும் நுணுக்கமாகவும் செயல்படுகிறார் என்பதை அவரிடம் பணிபுரியும் போது தான் உணர முடிகிறது என்று பிருத்விராஜ் பாராட்டி கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ஒரு காட்சியை எடுக்க 90 முறை ரீ டேக் சென்றது படப்பிடிப்பு குழுவுக்கு பலத்த சிரமத்தையும் நெருக்கடியையும் தந்திருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.





