நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த கலைஞராக தன்னை பல படங்களில் வெளிப்படுத்தியவர். ஹீரோ வில்லன் காமெடி குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் கனகச்சித்தமாக பொருந்தக் கூடிய நடிப்பு கலைஞன். 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் விஜயகாந்த் படங்களில் ராதாரவி தான் வில்லனாக இருப்பார். பிறகு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அதன்பிறகு பல ஆண்டுகளாக குணச்சித்திர நடிப்பில் அசத்திக்கொண்டு இருக்கிறார். சின்ன தம்பி காதலுக்கு மரியாதை இது நம்ம பூமி பாண்டித்துரை சின்ன மாப்ளே சர்கார் என பல படங்களில் வித்யாசமான நடிப்பை வழங்கியவர்.
ராதாரவி சில படங்களில் அவரது தந்தை எம்ஆர் ராதா போல வில்லனாகவும் அசத்தியிருக்கிறார். அதே போல் காமெடி நடிப்பிலும் தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக சின்ன மாப்ளே படத்தில் ஆளவந்தான் என்ற கிராமத்து பண்ணையார் கேரக்டரில் வேற லெவலில் நடித்திருப்பார்.
எம்ஆர் ராதாவின் மகன், நடிகைகள் ராதிகா நிரோஷா ஆகியோர் இவரது சகோதரிகள். சரத்குமார், ராம்கி இருவரும் இவரது சகோதரிகளின் கணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது 70 வயதுகளை கடந்த நிலையில் முதுமை காரணமாக படங்களில் நடிப்பதை ராதா ரவி வெகுவாக குறைத்து விட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ராதாரவி கூறியதாவது, இதுவரை எங்கேயும் நான் எம்ஆர் ராதா பையன். எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்க என்று நான் கேட்டதே இல்லை. திறமையால் மட்டுமே வந்து நின்னவன். ஆரம்பத்தில் நான் சில படங்களில் இரண்டு அல்லது மூன்று காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
அந்த அளவில்தான் அந்த சில படங்களில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பி வாசுதான் சின்னதம்பி படத்தில் எனக்கு முதன் முறையாக பெரிய ரோல் கொடுத்து நடிக்க வைத்தார். என்னை உள்வாங்கி கொண்டவர்கள், என்னை முழுசாக பயன்படுத்திக் கொண்டவர்கள் என்றால் அது இயக்குனர்கள் பி வாசு சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கேஎஸ் ரவிக்குமார் மட்டும்தான் என்று ராதாரவி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





