தமிழ் சினிமாவில் நடிகர் ராதாரவி முக்கியமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் அப்பா, அண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரி கேரக்டர்களிலும் ராதாரவி நடித்து வருகிறார்.
நடிகர் ராதாரவியை பொருத்த வரை எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் அழுத்தமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தி விடுவார். அதே நேரத்தில் சினிமா துறை சார்ந்த விஷயங்களிலும் அவரது கருத்துகளும் பார்வையும் ஒரு அனுபவமிக்க கலைஞராகவே வெளிப்படுத்தி வருகிறது. தன்னை பற்றி யதார்த்தமாக பல மேடைகளில் அவர் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது, சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நிறைய படங்களில் நடித்தேன். இப்போது கிடைக்கிற படங்களில் சொற்ப எண்ணிக்கையில் நடிக்கிறேன். ஆனாலும் இந்த வயதில் நடித்துக்கொண்டு இருக்கிறேன், அதுதான் முக்கியம். ஒரு பொது இடத்துக்கு சென்றால் அவர் நடிகர் ராதாரவி என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.
சினிமாவில் அந்த அளவுக்கு ஒரு இடத்தை அடையாளத்தை பெற்றிருப்பதே பெரிய விஷயம்தான். அப்போது பிஸியாக நிறைய படங்களில் நடித்தேன். இப்போது வயதான நிலையில் குறைந்த படங்களில் நடித்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறேன். எப்போதுமே வாழ்க்கையில் ஒரே மாதிரி இருந்து விட முடியாது.
ஆனால் இப்போதும் என்னுடைய படங்களை இயக்கிய டைரக்டர்களிடம், புது டைரக்டர்களிடம் கூட ஏன் இந்த படத்துல எனக்கு வாய்ப்பு தரலே என்று கேட்கிறேன். இதை பொதுவெளியிலும் மேடையிலும் கூட சொல்கிறேன். இதில் தயக்கம் எனக்கு கிடையாது. இதை அசிங்கமாகவோ அவமானமாகவோ நினைக்க வேண்டியதில்லை.
கதவு மூடியிருந்தால் தட்டிக்கொண்டு தான் உள்ளே வருகிறோம். கதவை தட்டாமல் ஒரு வீட்டுக்கு உள்ளே திடீர் என வந்தால் அது சரியாக இருக்குமா, இல்லை மூடிய கதவுக்கு பின்னால் ஒருவர் தட்டாமல் நின்றிருந்தால் உள்ளே இருப்பவருக்கு தெரியுமா, கதவை தட்டினால் உள்ளே வர சொல்வார்கள். அதுபோல் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பதுதான் சரி. சினிமா என்பதே வாய்ப்புதான். அதை கேட்பது தவறில்லை என்று நடிகர் ராதாரவி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





