தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களை சாப்பிட்டீங்களா என்று கேட்பதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழக்கம். அவர் வீட்டுக்கு அலுவலகத்துக்கு செல்பவர்களை சாப்பிடாமல் திருப்பி அனுப்ப மாட்டார் எம்ஜிஆர். அது சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி. தன்னை காண வருபவர்களை பசியோடு திரும்பிச் செல்ல அனுமதிக்க மாட்டார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
தமிழ் சினிமாவில் அதே பாணியை பின்பற்றியவர்தான் கேப்டன் நடிகர் விஜயகாந்த். அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் எப்போதும் வருபவர்களுக்கு உணவு தயாராக இருக்கும். 1980 90களில் உதவி இயக்குனர்களா தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு 3 நேரமும் பசியாற்றியது விஜயகாந்தின் அலுவலகம்தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
நடிகர் விஜயகாந்த் போலவே இப்போதைய தமிழ் சினிமாவில் ஏழை எளிய மக்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தாராள குணம் படைத்தவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக நடிகராக அவர் முன்னணி நாயகனாக இருக்கிறார். இப்போது காஞ்சனா 4 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் சில கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு பதிலளித்து கூறியதாவது, கடந்த காலங்களில் தெலுங்கில் நடிகை விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள்.
இப்போது நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட்டார்கள். அது தவறில்லை. அதேநேரம் தற்போது நயன்தாராவே அதனை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அது நயன்தாராவின் விருப்பம் என்று மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறினார்.
விஜயகாந்த் நடிகர் சங்கத்தை நடத்தியது போல் இப்போது நடத்துகிறார்களா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், விஜயகாந்த் போல் ஒருவர்தான் இருக்க முடியும். அவரை போல் வேறு யாரும் வரமுடியாது என்றும் கூறினார். மேலும் சமீபகாலமாக சாதி ரீதியான படங்கள் அதிகளவில் வருகிறது. சாதித் திணிப்பு சினிமாவில் அதிகமாக தலை தூக்குகிறது என்ற கேள்விக்கு, திரைப்படங்களில் சாதியை திணிப்பது தவறுதான் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் பதிலளித்து இருக்கிறார்.





