தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு அற்புதமான கலைஞர்தான் நடிகர் ரகுவரன். பல படங்களில் வில்லன் கேரக்டரில் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும். அவரது உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டும். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் அபார வெற்றிக்கு கூட மிஸ்டர் சிதம்பரமாக விசுவின் மூத்த மகன் கேரக்டரில் அசத்தியிருப்பார் ரகுவரன்.
கடந்த 1980 90களில் வந்த பல படங்களில் வில்லன் ரகுவரன். குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக பல படங்களில் ரகுவரன் மிரட்டியிருப்பார். பாட்ஷா படத்தில் மாணிக்பாட்ஷா போலவே மார்க் ஆண்டனியாக நடித்த ரகுவரனும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். காதலன் மனிதன் ராஜா சின்ன ரோஜா ஊர்க்காவலன் அருணாசலம் என பல படங்களில் வில்லனாக அசத்தியவர்.
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுடன் வில்லனாக நடித்தவர் ரகுவரன். ஆனால் கடைசி வரை அவர் நடிகர் கமல்ஹாசனுடன் எந்த படத்தில் நடிக்கவே இல்லை. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் படத்தில் முதலில் நாசர் கேரக்டரில் நடிக்க இருந்தது ரகுவரன்தான். அவரை தான் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பியிருக்கிறார்.
ஆனால் அந்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் ரகுவரன் வேண்டாம் நாசர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசனே கூறியதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. நல்ல திறமைசாலி கலைஞர்களை தன் படத்தில் நடிக்க வைக்கும் கமல்ஹாசன் அற்புத கலைஞன் ரகுவரனை மட்டும் மிஸ் செய்தது எப்படி என்பது ரசிகர்கள் பலரது கேள்வியாக உள்ளது.
நடிகர் ரகுவரன் தனது 49வது வயதில் உடல்நல பாதிப்பால் மறைந்துவிட்டார். அவரது கடைசி படம் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம்தான். இப்போது ரகுவரன் இருந்தாலும் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்திருப்பார். ரகுவரன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய போது கமலுடன் இணைந்து நடிக்காதது குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் நடிகர் ரகுவரன் கூறியதாவது, கமல் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் போட்டுப் பாருங்கள். அவர் நடிக்கிற ஒவ்வொரு சீன்லேயும் அவர்தான் நிப்பார். எப்படிப்பட்ட சீனாக இருந்தாலும் அவரைத் தாண்டி யாரும் ஸ்கோர் பண்ண முடியாது. அவரோடு நடித்து டம்மி ஆகிறதை விட நடிக்காமல் இருக்கிறதே நல்லதுன்னு நான் முடிவு பண்ணினேன். அவர் நடிப்பு மேல இருந்த பயம்தான் அதற்கு காரணம் என்று நடிகர் ரகுவரன் கூறியிருக்கிறார். நாயகன் படத்தில் ரகுவரன் நடிக்க மறுத்த பிறகுதான் நடிகர் நாசர் நடிக்க கமிட் ஆனார் என்றும் கூறப்படுகிறது.





