வழக்கமான மனிதர்கள் வாழ்வதற்காக தான் வீடுகள் கட்டிக் கொள்வார்கள். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமான பங்களாக்களை அரண்மனை போல எழுப்பி கொள்வார்கள். வாழும் மனிதர்கள் மறைவுக்கு பிறகுதான் அவர்களுக்கான கல்லறைகள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் ராஜேஷ், 35 ஆண்டுகளுக்கு முன்பே தனக்காக கல்லறை கட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதான நிலையில் நேற்று காலை சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். 180 படங்களுக்கு மேல் நடித்த ஒரு சிறந்த கலைஞர். அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை சோகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மறைந்த நடிகர் ராஜேஷ், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே தனக்காக ஒரு கல்லறையை கட்டியிருக்கிறார். அதாவது அவரது 40 வயதில் இந்த கல்லறையை அவர் கட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் ராஜேஷ், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, தொழிலதிபர் ஒருவரை பார்த்துதான் இப்படி ஒரு முடிவை நான் எடுத்தேன். அதனால்தான் நான் இறப்பதற்கு முன்பே எனக்கான ஒரு கல்லறையை கட்டிக்கொண்டேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த தொழிலதிபர் தனக்கு பிடித்த மாதிரி அவரது கல்லறையை கட்டிக்கொண்டார். அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்துதான் அவர் இறந்தார். சீனாவில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. எவன் ஒருவன் தனது இறப்புக்கு முன்பே தனக்கு கல்லறை அமைத்து கொள்கிறானோ அவன் நோய்களை வென்று 1000 ஆண்டுகள் வாழ்வான் என்பது நம்பிக்கை. இதுவும் என்னுடைய இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று நடிகர் ராஜேஷ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
நடிகர் ராஜேஷூக்கு அவர் பயன்படுத்தும் விஷயங்கள் எல்லாமே தனக்கு பிடித்த மாதிரியே இருக்க வேண்டும் என்றுதான் கருதுவார். வாழும் போதே தனக்கு பிடித்ததை செய்ய நினைத்த அவர், இறப்பிலும் அதை செய்ய கருதியிருக்கிறார். அதனால் தனது இறப்புக்கு பிறகு தன்னை அடக்கம் செய்யும் கல்லறையும் தனக்கு பிடித்தமான வகையில்இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு பிடித்த டிசைனில் இந்த கல்லறையை உருவாக்கி இருக்கிறார்.
நடிகர் ராஜேஷ் தனக்கு என்று கல்லறை கட்டி 25 ஆண்டுகள் கடந்த நிலையில் பாசி படிந்து மங்கிய நிலையில் அந்த கல்லறை பாழடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் தனது கல்லறையை கிரானைட் கற்களால் புதுப்பித்து கட்டி தனது மார்பளவு சிலையையும் அங்கு நிறுவியிருக்கிறார் நடிகர் ராஜேஷ். தனது கல்லறையை கட்டி வைத்துவிட்டு ஒரு மனிதர் 35 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் என்றால், அது எப்போ்ப்பட்ட ஒரு விஷயம் என்று ரசிகர்கள் உறைந்து போயிருக்கின்றனர்.





