நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நீண்ட ஆண்டுகளாக ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்தார்.
அதன்பிறகு நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த முடிவில் இருந்து பின்வாங்கினார். தனது உடல்நலம் சரியில்லை என்றும், தனது ரசிகர்களை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், நாம எதிர்க்கிறது யாருகிட்ட? யாரை? ரெண்டு பெரிய ஜாம்பவான்கள். அசுர பலத்தோட இருக்காங்க. அசுர பலத்தோட. பண பலம் ஆள் பலம் கட்டமைப்பு எந்த யுக்தி வேணாலும் பண்ணுவாங்க. அவங்களை சந்திப்போம். இன்னொரு பக்கம் ஆட்சியை கையில் வெச்சுக்கிட்டு அந்த குபேரனோட கஜானாவே கையில் வெச்சுக்கிட்டு புல் கட்டமைப்போடு அவங்க காத்துக்கிட்டு இருக்காங்க.
இவங்களுக்கு நடுவுலே நான் ஒரு சினிமா புகழை வெச்சுக்கிட்டு நம்ம ரசிகர்களை வெச்சுக்கிட்டு ஜெயிக்க முடியுமா? ஒரு எழுச்சி உருவாகணும். அப்படி ஒரு எழுச்சி உண்டாச்சுன்னு வெச்சுக்குங்களேன். இளைஞர் மத்தியில் ஜனங்க மத்தியில் அப்படி உண்டாயிடுச்சுன்னு சொன்னா இந்த ஜாம்பவான்கள் பணம் அசுர பலம் புகழ் எதுவுமே நிற்காது. விழுந்துடும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் பேசிய அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது ஆளுங்கட்சியாக அதிமுகவும் எதிர்கட்சியாக திமுகவும் இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் என்கிற இந்த 2 அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து, ரசிகர்களை மட்டுமே நம்பி என்னால் அரசியலில் குதிக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இப்போது தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதமாக வந்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு எதிராக பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் புரட்சி வந்தால் மக்களிடம் எழுச்சி வந்தால் இந்த ஜாம்பவான்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று ரஜினி பேசியிருப்பதையும் சுட்டிக் காட்டி அந்த எழுச்சியை தான் விஜய் ஏற்படுத்தி இருக்கிறார். அதனால் தவெக வெற்றி உறுதி என்றும் அக்கட்சியினர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.





