நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் கூலி படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சென்னை ஐதராபாத் கேரளா பாலக்காடு பகுதிகளில் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் மோகன்லால் சிவராஜ்குமார் மற்றும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் தமன்னாவும் நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் 2ம் பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. ரஜினி அவரது சினிமா கேரியரில் முதன்முறையாக தனது படத்தின் 2ம் பாகத்தில் இதில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களாக பாலக்காடு பகுதியில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவரை சந்தித்து ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டில் ஜூன் 12ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகிறது என்ற முக்கிய தகவலையும் வெளியிட்டார். இது ஒருபுறம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
வருகிற 2026ம் ஆண்டில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில்தான் ஜெயிலர் 2 படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. அதே தமிழ் புத்தாண்டில்தான் சூர்யா நடித்த கருப்பு படமும் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜூன் 12ம் தேதி என 2 மாதங்கள் கழித்துதான் ஜெயிலர் 2 ரிலீஸாகும் என படத்தின் ஹீரோ ரஜினியே உறுதிபட தெரிவித்து விட்டார்.
ஆனால் ஜூன் மாதம் என்பது பள்ளிகள் திறப்பு மாதமாக உள்ளது. அந்த காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கல்வி கட்டணங்கள் மக்களை சுமையாக அழுத்தும். பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துகிற சூழலில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் ஜெயிலர் 2 படம் பார்க்க வருவது குறைந்தால் வசூல் கடுமையாக பாதிக்குமே என்று ரஜினி ரசிகர்கள் புலம்புகின்றனர்.





