உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு நடிகர் ரஜினிகாந்தை அடையாளம் கண்டுகொள்ளும் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நெருப்பாக இருக்கின்றனர். அதனால்தான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் பெரும்பாலும் அவுட்டோர் ஷூட்டிங் வைத்துக்கொள்வது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் தொல்லை அதிகம் என்பதால் பெரும்பாலும் ஐதராபாத் மைசூருவில் ரஜினி படங்கள் அதிகளவில் பல ஆண்டுகளாக படமாக்கப்படுகின்றன.
பொது இடங்களுக்கு செல்ல விரும்பும் நடிகர் ரஜினிகாந்த், இரவு நேரங்களில் மாறுவேடங்களில் செல்வது வழக்கம். அந்த காலத்தில் மன்னர்கள் மாறுவேடத்தில் இரவில் நகர்வலம் போவது போல ரஜினிகாந்த் இரவு நேரங்களில் தனக்கு பிடித்த படங்களை பார்க்க மாறுவேடங்களில் செல்வது வழக்கம்.
அதே போல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் பௌர்மணி நாட்களில் ரஜினி பல ஆண்டுகளாக மாறுவேடத்தில் கிரிவலம் சென்றிருக்கிறார். அதே போல் பிரபலமான பல முக்கிய கோவில்களுக்கு ரஜினி இப்படி மாறுவேடத்தில் செல்வது வழக்கம். பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கோவிலுக்கும் ரஜினி, பல ஆண்டுகளுக்கு முன் மாறுவேடத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது நடந்த சம்பவம்தான் இது. இதை ரஜினிகாந்தே ஒருமுறை நேர்காணலில் கூறியிருக்கிறார். பெங்களூருவில் இருக்கும் ஒரு கோவிலுக்கு மாறுவேடத்தில் நான் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது அங்கு சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், என்னை பார்த்ததும் யாரோ யாசகம் பெறுகிற நபர் என்று நினைத்து விட்டார். அந்த பெண் என்னிடம் 10 ரூபாயை தர்மமாக கொடுத்தார். நானும் மறுக்காமல் பெற்றுக்கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து என்னிடம் இருந்த 200 ரூபாயை உண்டியலில் போட்டேன். இதை பார்த்த பெண்ணுக்கு எதுவுமே புரியவில்லை. அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருந்தார். கோவிலில் இருந்து நான் கிளம்பிய போது என்னை பின்தொடர்ந்தே வந்தார். நான் வெளியே வந்து காரில் ஏறியதும் என் தலையில் கட்டியிருந்த துணியை அகற்றி விட்டேன்.
அப்போதுதான் அந்த பெண்ணுக்கு நான் யார் என்றே தெரிந்தது. அந்த பெண் மிகவும் அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டார். நான் சட்டென்று காரில் ஏறி வந்துவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார். பெரும்பாலும் கோவில்களுக்கு செல்லும்போது ரஜினிகாந்த் சாமியார் போன்ற ஒரு கெட்டப்பில் தான் இருப்பார். ஏனெனில் கோவில்களில் சாமியார் நடமாட்டம் அதிகம் என்பதால் சட்டென அடையாளம் தெரியாது. அதனால் சாமியார் என நினைத்து அந்த பெண்மணி ரஜினிக்கு தானம் செய்திருக்கிறார்.





