நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து நடித்த படம் கூலி. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் சென்னை மற்றும் கேரளாவில் பாலக்காடு கோழிக்கோடு பகுதிகளில் 3 கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தன. இந்நிலையில் ரஜினிகாந்த் இப்போது சென்னையில் போயஸ்கார்டன் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வருகிற 20ம் தேதி மைசூருவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்தி தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி படங்கள் தொடர்ந்து 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்து வருகின்றன. அதிலும் இந்தி தெலுங்கு படங்கள் அதிகமுறை 1000 கோடி ரூபாய் வசூலை உலகளவில் செய்து சாதனை படைத்து விட்டன. ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற சாதனை எட்டப்படாமல் இருந்து வருகிறது.
அதனால் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இணைந்த கூலி படம் பிளாக்பஸ்டர் மூவியாக பெரிய வெற்றியை அடையும். குறிப்பாக ரூ. 1000 கோடி வசூல் சாதனையை இந்த படம் படைக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர். பான் இந்தியா படமாக கூலி இந்த சாதனையை நிகழ்த்துவது சாத்தியம்தான் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் மொழி பிரபல நடிகர்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் பாதியை அதாவது பர்ஸ்ட் ஹாப் படத்தை பார்த்திருக்கிறார். ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த ரஜினிக்கு, லோகேஷ் கனகராஜ் பாதி வரை தயார் நிலையில் உள்ள கூலி படத்தின் காட்சிகளை போட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்த ரஜினி மிகவும் உற்சாகமடைந்திருக்கிறார்.
படம் ரொம்ப அருமையாக வந்திருக்கு, பல காட்சிகள் எனக்கே ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்று லோகேஷ் கனகராஜை பாராட்டி இருக்கிறார். இன்னும் பாதி படத்தை ஜெயிலர் 2 படத்தின் மைசூரு ஷெட்யூலை முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன் என்றும் உற்சாகமாக கூறியிருக்கிறார். இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவினரிடம் கூறியிருக்கிறார். அதனால் கூலி படம் ரசிகர்களை தெறிக்க விடும் என்பதில் சந்தேகம் இல்லை.





