வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் கோமாளி. ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நாயகனாக நடித்த படம் லவ் டுடே. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இளம் காதலர்கள் மத்தியில் செல்போன் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று காமெடி சென்டிமென்ட் கலந்து சொன்ன படமாக லவ்டுடே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்போது ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் 10 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றிப் படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் கேஎஸ் ரவிக்குமார் கெளதம் மேனன் மிஷ்கின் நடித்த இந்த படம் பெரிய பாராட்டை பெற்றுள்ளது.
சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட பிரதீப் ரங்கநாதன், கல்லூரியில் படித்த காலத்திலேயே குறும்படங்களை இயக்கி பெரிய அளவில் பாராட்டை பெற்றவர். லோகேஷ் கனகராஜை போல பிரதீப் ரங்கநாதனும் யாரிடமும் உதவி இயக்குனராக பணிசெய்யாமல் நேரடியாக திரைப்பட இயக்குனராக களத்தில் இறங்கியவர்.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டர் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நிறைய முயற்சி பண்ணினேன். யாரை எப்படி அணுக வேண்டும் என்கிற ரூட்டே எனக்கு தெரியவில்லை. அதனால்தான் நான் கோமாளி படம் முடித்த உடனே அசிஸ்டன்ட் டைரக்டர்கள் தேவை என்று அறிக்கை விட்டேன்.
யாராக இருந்தாலும் ரெஷ்யூமை என் மெயில் ஐடிக்கு மட்டும் அனுப்ப சொன்னேன். பேப்பராக அனுப்பினால் என் கண்ணுக்கு படாமல் கூட போய்விடலாம். அதில் எனக்கு 7 ஆயிரம் மெயில் வந்தது. அதிலிருந்து 8 பேரை தேர்வு செய்தோம். அவர்களுக்கு என்ன முதல் கண்டிஷன் என்றால், ரெக்மென்டேஷன் இருக்கக் கூடாது. ஏனென்றால் எனக்கு எங்கே போனாலும் ரெக்மெண்டேஷன் கேட்டுக்கொண்டே இருந்தாங்க. அதனால் ரெகமெண்டேஷன் இல்லாதவங்களை மட்டுமே தேர்வு செய்தோம் என்று பிரதீப் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்.





