சினிமாவில் நடித்து லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பல நடிகர்கள் நடிகைகள் பலரும் அந்த வருமானத்தில் அசையா சொத்துகளை வாங்கி போட்டு விடுகின்றனர். பண்ணை வீடுகள் நட்சத்திர ஓட்டல்கள் வணிக வளாகங்கள் விவசாய நிலங்கள் அபார்ட்மென்ட்டுகள் என வாங்கி அந்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து விடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த அசையா சொத்துகள் மூலம் ஏராளமான வருவாய் குவிந்து விடுகிறது. அதனால் சினிமாவில் நடிக்காமல் இருந்தால் கூட இந்த அசையா சொத்துகள் மூலம் மாதந்தோறும் வாடகையாக பல லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். அதனால் நடிப்பில் வருமானம் குறைந்தாலும் அவர்களுக்கு பொருளாதார கவலை இருப்பதில்லை.
அதே போல் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான அசையா சொத்துகள் சென்னை மற்றும் பெங்களூருவில் நிறைய உள்ளன. சென்னை கோடம்பாக்கம் சாலையில் ரஜினிக்கு சொந்தமான மிகப்பெரிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை வசந்த பவன் ஓட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாடகைக்கு கொடுத்திருந்தார்.
இந்த கட்டிடத்திற்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 56,84,000 ரூபாய் சேவை வரி செலுத்துமாறு கட்டிட உரிமையாளர் நடிகர் ரஜினிகாந்துக்கு சேவை வரித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கடந்த 2016ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் அஜீத்குமார் நீதித்துறை உறுப்பினர் அஜயன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார். கடந்த 1994ம் ஆண்டு நிதி சட்டத்தின் கீழ் ஓட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டிடங்களுக்கு சேவை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவை வரிகள் துறை தரப்பு வக்கீல் ரீனா, ஓட்டலுக்குள் உணவகம் கருத்தரங்க கூடம் பார் என இயங்கி வந்ததால் சேவை வரி விலக்கு பெற முடியாது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஓட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும். அவற்றை தனித்தனி கட்டிடமாக கருத முடியாது. எனவே வரிவிலக்கு பெற ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது. சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.





