இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிட்டத்தக்க இடத்தில் இருக்கும் ஒரு சிறந்த இயக்குநர். பல ஆண்டுகளுக்கு முன் மதுரை ரவுடிகளை மையப்படுத்தி அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சித்தார்த், கருணாகரன், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜனரஞ்சகமாக அமைந்தது.
அடுத்து சூது கவ்வும், இறைவி படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். அது மிகப்பெரிய வெற்றிப் படமாக அவர் பெயர் வாங்கி கொடுத்தது. 1980,90களில் பார்த்த ஸ்டைலான ரஜினியை திரையில் கொண்டு வந்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
முதலில் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் நடிக்க வேண்டியவர் ராகவா லாரன்ஸ்தான். ஆனால், அப்போதைய பிஸியான ஷெட்யூலில் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் படம் பெரிய வெற்றியை பெற்றது. அதனால், அந்த படத்தை டிவியில் பார்த்தால், நல்ல படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என, ரிமோட் எடுத்து அடுத்த சேனலை மாற்றும் அளவுக்கு ஏமாற்றத்தில் இருந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற டைட்டிலில், 2ம் பாகத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். கடந்த முறை போல வாய்ப்பை நழுவ விடாமல் இந்த 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். அவருடன் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவும் கைகோர்த்து விட்டதால், இந்த படம் பெரிய அளவில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி விடாமல், மிகப்பெரிய திருப்தியை, சந்தோஷத்தை தந்திருக்கிறது. இந்த படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக லாரன்ஸ் நடிப்பு மிக சிறப்பு என்றும் பாராட்டுகின்றனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர் தனது டிவிட்டர் பதிவில், படம் சிறப்பாக உள்ளது. இது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான, புத்திசாலித்தனமான படைப்பு, இந்த படத்தில் இரண்டாம் பாகம், யாரும் எதிர்பார்க்காத வகையில், அருமையாக உள்ளது. லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரது நடிப்புமே மிக சிறப்பாக உள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், சினிமாவுக்கான மரியாதையை உயர்த்தி இருக்கிறது, என்று பாராட்டி இருக்கிறார். இது இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.





