தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக பல படங்களில் நடித்து வருபவர் ராஜ்கிரண். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்து பிறகு நடிகராக மாறியவர். ராஜ்கிரண், மீனாவுடன் நடித்த என் ராசாவின் மனசிலே படம்தான் அவரது முதல் படம். இந்த படம்தான் நடிகர் வடிவேலுவுக்கும் அறிமுக நடிகராக அடையாளத்தை கொடுத்தது.
பிறகு அரண்மனை கிளி மாணிக்கம் எல்லாமே என் ராசாதான் பொன்னு விளையற பூமி உள்ளிட்ட பல படங்களில் ராஜ்கிரண் நாயகனாக நடித்தார். சண்டக்கோழி கொம்பன் ரஜினி முருகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இப்போதும் அவர் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும் என்னை வைத்து திரைப்படம் இயக்குவதாக என்று சிலரும் என் அபிமானிகள் என்றும் என் தீவிர ரசிகர்கள் என்றும் பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம்.
இந்த மாதிரியாக என்னுடன் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
கனடா செல்வம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் என்னை வைத்து படம் தயாரிப்பதாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் இதுவரை அவர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. அந்த நபர் இப்போது அவரது பெயரை ஸ்டாலின் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.
என்னிடம் யாருடைய சிபாரிசும் எடுபடாது. என் விஷயங்களில் நான் மட்டுமே முடிவு செய்கிறேன். என்னுடன் இருக்கும் இது போன்ற புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவை செய்கிறேன் என்று நடிகர் ராஜ்கிரண் அந்த பதிவில் கூறி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





