ஜெயம் ரவி என்னும் தனது பெயரை ரவி மோகன் என்று அவர் மாற்றி இருக்கிறார். அண்மையில் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது. இப்படியான சூழலில் தனது தோழி கெனிஷாவுடன், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ரவி மோகன்.
இது ஒரு பக்கம் இருக்க திரை துறையிலும் அவர் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலானவை படுதோல்வியையே சந்தித்தன. இதிலிருந்து மீள்வதற்காக அடுத்தடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து, நடித்து வருகிறார் ரவி மோகன்.
இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் கதாநாயகன். இருப்பினும் அதில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. வில்லத் தனத்தில் அவர் எப்படி மிரட்ட போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுபோக கராத்தே பாபு என்னும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். முழுக்க முழுக்க அரசியலை பிரதானப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. டாடா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, கணேஷ் கே பாபு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக ரவி மோகன் நடித்திருக்கிறார்.
இது போக ரவி மோகன் நடிப்பில் ஜீனி என்ற திரைப்படமும் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இப்படியான சூழலில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் ரவி மோகன். இதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்று உள்ளார்கள். முக்கியமாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ் ஜே சூர்யா, அதர்வா, இயக்குனர் தமிழ், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குனர் சுதா கொங்கரா, நடிகை ஜெனிலியா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.





