இயக்குனர் விசு இயக்கி நடித்த வரவு நல்ல உறவு வேடிக்கை என் வாடிக்கை உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரவி ராகவேந்தர். இவர் இப்போதும் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது மகன்தான் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்ல, மற்றொரு முக்கிய அடையாளமும் இவருக்கு உள்ளது.
ரவி ராகவேந்தர் வேறு யாருமல்ல. நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சொந்த சகோதரர்தான். அதாவது ரஜினியும் ரவி ராகவேந்தரும் மாமன் மச்சான் உறவு முறைக்காரர்கள். இது பல பேருக்கும் தெரியாத ரகசியம். தனது சகோதரியின் கணவர் சூப்பர் ஸ்டராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ளாதவராக இருப்பவர் ரவி ராகவேந்தர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ரவி ராகவேந்தர் கூறியதாவது, நானும் ரஜினியும் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் மச்சான் மாமா என்று அழைத்துக்கொண்டது இல்லை. நானும் அவரை சார் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை சார் என்றுதான் அழைப்பார். அது லதா ரஜினி திருமணம் ஆன காலகட்டத்தில் இருந்தே அப்படிதான் நாங்கள் இருக்கிறோம்.
முதலில் லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக என் அம்மா என்னிடம் போனில் சொன்ன போது உனக்கென்ன பைத்தியமா என்றுதான் திட்டினேன். ரஜினி மாப்பிள்ளை என்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அன்று இரவு ரஜினியிடம் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பேசிய போதுதான் அவர் மிகவும் நல்ல மனிதர் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
திருப்பதி சன்னதியில்தான் ரஜினி – லதா திருமணம் நடந்தது. முந்தின நாள் இரவே நாங்கள் திருப்பதிக்கு சென்று விட்டோம். மிகவும் குறைந்த ஆட்கள்தான். 20 30 பேர்தான் திருமணத்தில் இருந்தோம். அதிகாலையில் 4 மணிக்கு அவர்களுக்கு திருமணம் நடந்தது. முறையாக பர்மிஷன் வாங்கி சன்னதியில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு காலை 6 மணிக்கெல்லாம் கீழே வந்துவிட்டோம். அப்புறம் நேராக சென்னைக்கு 9 மணிக்கு வந்துவிட்டோம். அப்புறம் 10 மணி 10:30 மணியளவில் ரஜினிகாந்த் ஷூட்டிங் கிளம்பி போய்விட்டார். அப்போது நெற்றிக்கண் படப்பிடிப்பு நடந்தது. திருமணம் முடிந்து தாலி கட்டின கையோடு 10:30 மணிக்கு ஷூட்டிங்குக்கு ரஜினி சென்றுவிட்டார் என்று நடிகர் ரவி ராகவேந்தர் கூறியிருக்கிறார்.





