கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் 6 மாதங்களுக்குப் பிறகு தாமதமாக நேற்று வெளியானது. ஏற்கனவே இணையத்தில் இந்த படம் லீக் ஆகிவிட்டதால் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது.
ஆனால் வழக்கம் போலவே விஜய்க்கான வசூல் இந்த முறையும் வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த விஜய் 2024ம் ஆண்டில் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதே நேரத்தில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். அவருடைய 69வது கடைசி படமாக ஜனநாயகன் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல தடைகளை கடந்து நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
ஏற்கனவே ஜனநாயகன் படம் இணையத்தில் எச்டி தரத்தில் வெளியானதால் தியேட்டர்களில் ஆர்ப்பரிப்பும் ரசிகர்களின் உற்சாகமும் பெரிய அளவில் இருக்காது என்று தான் கருதப்பட்டது. ஆனால் நேற்று தளபதி ரசிகர்களின் கொண்டாட்டத்தால் தியேட்டர்கள் திருவிழா போல களைகட்டியது. உலகம் முழுவதும் 8 ஆயிரம் தியேட்டர்களில் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டுமே 5300 தியேட்டர்களில் ஜனநாயகன் படம் வெளியானது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 1250 தியேட்டர்களில் 2700 திரைகளில் நேற்று ஜனநாயகன் படம் வெளியானது. ஆக்சன் அதிரடி படமாக தளபதி ரசிகர்களை திருப்திப்படுத்திய ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளில் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஜனநாயகன் படம் மொத்தம் 78 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே 41 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 36.50 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் தெலுங்கில் 2.75 கோடியும் இந்தியில் 1.75 கோடியும் வசூலித்துள்ளது. இன்னும் தொடரும் நாட்களில் வார விடுமுறை நாட்கள் வருவதால் ஜனநாயகன் படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2ம் நாளான இன்று 100 கோடி ரூபாய் கிளப்பில் ஜனநாயகன் படம் இணைந்து விடும்.
அதே நேரத்தில் ஜனநாயகன் படம் 1000 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக ரிலீசாகும் படங்கள் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் என திரையிட்டுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி 7 நாட்கள் தொடர்ந்து 5 காட்சிகள் என ஜனநாயகன் படம் திரையிடப்பட உள்ளதால் சனி ஞாயிறு தினங்களில் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





