தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஒரு படத்தின் பட்ஜெட் சில கோடிகள் என்றாலே, அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தமிழ் சினிமாவுக்குள் வந்த காலகட்டத்தில், இயக்குநர் ஷங்கர் எடுத்த படங்கள், சில கோடிகளாக இருந்தது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பின் 10 கோடி 20 கோடி என தயாரிக்கப்படும் படங்களின் பட்ஜெட் உயர்ந்த நிலையில் நடிகர்களின் சம்பளமும் லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு தாவியது. இப்போது அந்த கோடிகளும் நூறுகளை கடந்துவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜீத் குமார் என இவர்களது சம்பளம் 100 கோடி ரூபாயை கடந்து பல படங்கள் வந்துவிட்டது. இதில் விஜய், இப்போது நடித்துவரும் படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம் பெறுகிறார்.
இப்படி நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், மக்களுக்காக அதில் ஏதேனும் சிறிதாவது செய்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. நடிகர் விஜய் சமீபத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு ரூ. 2 கோடி வரை செலவு செய்து ரொக்கப்பரிசு வழங்கினார். மற்றவர்கள் தரப்பில் எந்தவிதமான ரியாக்சனும் இல்லை.
சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ. 6 லட்சம், சூர்யா, கார்த்தி தரப்பில் ரூ. 10 லட்சம், இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம், கவிஞர் வைரமுத்து ரூ. 1 லட்சம் என சினிமா கலைஞர்கள் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி, கமல் தரப்பில் இருந்து எந்த அசைவும் இல்லை. அவர்கள் எல்லாம் அவர்களிடம் கொட்டிக் கிடக்கும் பணத்தில் கோடிக்கணக்கில் கொடுக்க முடியும்.
ஆனால் மற்ற நடிகர்களுக்கு பிறருக்கு உதவும் மனமும், நல்ல குணமும் இருக்கிறது. காந்தாரா படம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்தவர் ரிஷப் ஷெட்டி. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது காந்தாரா படத்தின் அடுத்த பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் சர்காரி ஹி. இது கன்னட மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் அவல நிலையை வெளிப்படுத்திய படமாக அமைந்தது. இந்த படம் சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வென்றது. ஒரு சிறந்த படத்தை தந்தது மட்டுமின்றி, மிகச்சிறந்த ஒரு செயலையும் அவர் செய்திருக்கிறார். ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை மூலம் தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.





