டைரக்டர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில், மிக கொடூரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஆர். கே சுரேஷ். இவர் படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மருது படத்திலும், இவர் கொடூர வில்லனாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பரபரப்பாக காணப்பட்ட இவர், ஒரு கட்டத்தில் பாஜக ஆதரவாளராக மாறி, பாஜக கூட்டத்தில் காணப்பட்ட ஆர்கே சுரேஷ் காணாமல் போய்விட்டார். வெளிநாட்டில் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
ஆருத்ரா நிதி நிறுவனம் சார்பில், அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், நடிகர் மற்றும் படத் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகாமல் துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால் ஆர்கே சுரேஷை தேடப்படும் நபராக போலீசார் அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் போலீசார் வெளியிட்டனர்.
ஆனால் இந்த மோசடி வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படத்தயாரிப்பு தொடர்பான வரவு செலவுக்காக மட்டுமே ஆருத்ரா நிறுவன இயக்குநர்களுடன் நான் தொடர்பு கொண்டிருந்தேன் என, ஆர்கே சுரேஷ் விளக்கம் தந்திருந்தார். மேலும், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக அவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று அந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, ஆர்கே சுரேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வரும் 10ம் தேதி நாடு திரும்புவதாக கூறப்பட்டிருந்தது. அதற்கு போலீஸ் தரப்பில், இந்த வழக்கில் ரூ. 12 கோடி வரை, ஆர்கே சுரேஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் வந்தவுடன் அவரை கைது செய்யாவிட்டால், மோசடி செய்த ஆதாரங்களை எல்லாம் அழித்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களுக்கு பிறகு பேசிய நீதிபதி, வரும் 12ம் தேதி, ஆர்கே சுரேஷ், போலீசாரின் முன்னிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். போலீசார் ஒருவேளை ஆர்கே சுரேஷை கைது செய்யும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தின் முன்அனுமதியை போலீசார் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கை வரும் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.





