விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோ மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இதில் தமிழ் சினிமா படங்களின் கதைகளை அப்படியே காமெடியாக உல்டாவாக்கி ரஜினி கமல் விஜய் கேரக்டர்களில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்தவர் சந்தானம்.
வல்லவன் படத்தில் சந்தானம் நடிக்க வாய்ப்பு தந்தவர் நடிகர் சிலம்பரசன்தான். அவர் மூலமாக தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது என்று எப்போதுமே சந்தானம் நன்றி மறக்காமல் கூறிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து வல்லவன் வானம் ஒஸ்தி உள்ளிட்ட படங்களிலும் சிம்புவுடன் சந்தானம் நடித்திருந்தார்.
பிறகு முன்னணி ஹீரோக்களுடன் சந்தானம் காமெடி ரோலில் நடித்தார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் படங்களில் இரட்டை ஹீரோவாக சந்தானம் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிறகு சந்தானமும் காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் விக்ரம் ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியாக நடித்த சந்தானம், ஹீரோவான பிறகு நடிக்க வந்த சூரியும் இப்போது ஹீரோவாகி விட்டார். யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி செய்யும் காமெடியை பார்த்து ரசிகர்கள் நொந்து போகின்றனர்.
இந்த சூழலில் 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். பல காட்சிகளில் அவர் அடிக்கும் பஞ்ச் டயலாக் ரசிகர்களை ரசித்து ரசித்து சிரிக்க வைக்கிறது. அதனால் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வரவேண்டும் என்று ரசிகர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையடுத்து இனி மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலில் நடிக்கவும் சந்தானம் முடிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் படம் முழுக்க தனக்கு காட்சிகள் இருக்கும்படியும் படத்தில் இரட்டை ஹீரோவில் ஒருவராக நடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க உள்ளதாகவும், முழுநீள காமெடி படங்களில் ஹீரோவாகவும் நடிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





