தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. குறிப்பாக ராக்காயி கோயில் அமைதிப்படை இந்தியன் சின்னவர் ஆத்தா உன் கோயிலிலே அபிராமி செந்தமிழ் பாட்டு மலை மலை உரிமை ஊசலாடுகிறது வாட்ச்மேன் வடிவேலு என பல படங்களில் கஸ்தூரி நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம். இன்று கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் தொடர்ச்சியாக 2023ம் ஆண்டில் வெளிவந்த டிடி ரிட்டர்ன்ஸ் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படங்களை தொடர்ந்து இப்போது 3ம் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து நடிகை கஸ்தூரி நிழல்கள் ரவி யாஷிகா ஆனந்த் செல்வராகவன் கௌதம் வாசுதேவ் மேனன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். வருகிற மே மாதம் 16ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் குறித்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தானம் கூறியதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் எனக்கு அம்மாவாக கஸ்தூரியம் அப்பாவாக நிழல்கள் ரவையும் நடித்திருக்கின்றனர்.
படத்தில் எனக்கு தங்கையாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கஸ்தூரி மேடம் கிட்ட இந்த படத்துல எனக்கு அம்மா கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, என்னது, நான் சந்தானத்துக்கு அம்மாவா என்று கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். கதையைக் கேட்டுட்டு முடிவை சொல்லுங்க என்று கூறிவிட்டு அவரிடம் கதையைச் சொன்னதும்தான் பிறகு நடிக்க சம்மதித்தார்.
கஸ்தூரியின் கதாபாத்திரத்தில் திடுக்கிடும் பல சம்பவங்கள் இருக்கிறது. இந்த படத்தில் நிழல்கள் ரவியும் கஸ்தூரியும் எனக்கு அப்பா, அம்மாவாக நடித்துள்ளனர். படம் முழுவதும் அவர்கள் வருகின்றனர் என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார். குஷ்பு மீனா ரம்பா சிம்ரன் போன்றவர்களே அம்மா நடிகைகளாக மாறிவிட்ட நிலையில் கஸ்தூரியும் இனி அம்மா கேரக்டர்களில் பல படங்களில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.





