நானும் ரவுடிதான், போடா போடி, காத்துவாக்குல ரெண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைக் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் நடிகை நயன்தாராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தன் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று புதுச்சேரிக்கு சென்றுள்ளார். புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசிஎள்ளார். அப்போது புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விலை பேசி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் லட்சுமி நாராயணன், அது அரசு சொத்து என்று கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு தருவீர்களா என்றும் விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். அதனால் ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா என கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர், புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
அதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்தினால் போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு சம்பந்தம் தெரிவித்த விக்னேஷ் சிவன் துறைமுக வளாகத்தில் உள்ள பொழுது வாக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஒரு படத்தில் கவுண்டமணிக்கு லாட்டரி சீட்டில் 25 லட்சம் பரிசு கிடைத்து விடும். உடனே அவர் செந்திலிடம், இந்த ரோடு என்ன விலை, இந்த தெரு என்ன விலை என்று அகங்காரமாக கேட்பார். அதுபோல் அரசுக்கு சொந்தமான ஓட்டலை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





