தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் நடிகர் சந்தானம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். சமீபகாலமாக அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். இனி அடுத்ததாக அவரது நடிப்பில் டிடி ரிடர்ன்ஸ் நெக்ஸ் லெவல் என்ற படம் திரைக்கு வர உள்ளது.
நடிகர் சந்தானம் நடிகர் ஆர்யா இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான நட்பில் இருப்பவர்கள்.
சமீபத்தில் எஸ்டிஆர் 49 படத்துவக்க விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர் சந்தானம் பேசியதாவது, நான் சில ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருந்தேன். அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வீட்டில் சின்ன சின்ன மராமத்து வேலைகள் செய்து சில வசதிகளை செய்துக்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தேன். அதற்காக ஆட்களிடம் சொல்லி இருந்தேன்.
நான் வாங்கிய அந்த வீடு என் அம்மா மற்றும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதனால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று அந்த வீட்டுக்கு சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டு விட்டு வருவார்கள். விரைவில் அந்த வீட்டில் சில கட்டுமான பணிகளை செய்துவிட்டு அந்த வீட்டுக்கு குடும்பத்துடன் குடியேற நான் திட்டமிட்டு இருந்தேன்.
ஒருமுறை நான் ஆர்யாவிடம் பேசும் போது, மச்சான் நான் சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். சின்ன சின்ன வேலைகளை செய்துவிட்டு அந்த வீட்டுக்கே குடி போக போகிறேன் என்றும் சொல்லி விட்டேன். அப்படியா என்று கேட்ட ஆர்யா, உடனே அந்த வீட்டை பார்க்க நேரில் வந்துவிட்டார். வீட்டை பார்த்த பிறகு, இந்த வீடு எனக்கு பிடிக்கலை மச்சான், இடிச்சிடலாம் என்று சொல்லிவிட்டு அதற்காக ஆட்களையும் வரச் சொல்லி விட்டார். நான் சொன்னதை ஆர்யா கேட்கவே இல்லை.
அடுத்த சில நாட்களில் என் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் அம்மா மற்றும் மனைவியிடமும் இதை சொல்லாமல் மறைத்துவிட்டேன். வழக்கம் போல வெள்ளிக்கிழமையன்று அந்த வீட்டுக்கு விளக்கு போட போன அவர்கள், வீட்டை காணாமல் தேடி இருக்கின்றனர். அதற்கு பிறகுதான் விஷயத்தை சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினேன் என நடிகர் சந்தானம் அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





