தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்னை நடிகர்களின் சம்பளம்தான். கடந்த ஓராண்டில் மட்டும் நடிகர்களின் சம்பளம் 70 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த நடிகர்களின் ஹிட் படங்கள் வரிசையை பார்த்தால் பெரும்பாலும் பிளாப் படங்களாக தான் இருக்கின்றன.
படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என்றால், இதில் கதாநாயகனின் சம்பளமே 180 கோடி ரூபாய் என்றால், ஒரு தயாரிப்பாளர் எப்படிப்பட்ட படத்தை தயாரிக்க முடியும்? ஒரு இயக்குனர்கள் தான் சொல்ல வந்த விஷயத்தை எப்படி திரையில் காட்சிகளாக கொண்டு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதனால் நடிகர்களின் சம்பளம், தமிழ் சினிமாவின் வளமான எதிர்காலத்துக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர்களின் சம்பளத்தை தீர்மானிப்பது தயாரிப்பாளர்கள்தான். நடிகர்கள் கேட்பது இல்லை. முதலில் ஒரு நாயகனை நடிக்க வைக்கும் போது, பெரிய சம்பளம் பேசாமல் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் தயாரிப்பாளர் அந்த பையனை நடிக்க வைத்து விடுகிறார்.
படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்பா. ஏதோ செலவுக்கு பணம் தர்றேன் என்று தயாரிப்பாளர் ஏதோ சொல்லி அவரை முதல் படத்தில் நடிக்க வைத்து விடுகிறார். அதன்பிறகு அந்த படம் ஹிட் ஆனவுடன் அது கதைக்காக ஓடியதா, நாயகனுக்காக ஓடியதா என்று கூட தெரியாமல், அடுத்த படத்துக்கு அதே நடிகரை புக் செய்ய 1 கோடி ரூபாய் சம்பளம் என அந்த தயாரிப்பாளர் தீர்மானித்தால் அது யாருடைய தப்பு?
அப்படி அந்த நடிகர் சம்பளம் உயர்த்தி கேட்டால், நீங்கள் கொடுக்காமல் இருந்திருக்கலாமே? ஒரு படம் ஹிட் ஆகி விட்டால், உடனே அந்த நடிகர் நடிக்கும் அடுத்த படமும் விரைவில் விற்றுவிடும் என்பதற்காக அந்த நாயகனுக்கு சம்பளத்தை உயர்த்தி தருவது தயாரிப்பாளர்தான் என்று நான் சொல்கிறேன்.
அப்படியே அந்த நடிகர் கேட்டாலும், தம்பி இப்பதானே நடிக்க வந்துருக்கீங்க என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் தர்றேன் என சம்பளத்தில் தயாரிப்பாளர் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தால் நடிகர்களின் சம்பளம் இந்தளவுக்கு உயர்ந்திருக்காது என்று நான் நினைக்கிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் சரத்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





