நடிகர் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சரத்குமார். பிறகு நாயகனாக நடித்து நாட்டாமை சூரியவம்சம் நட்புக்காக என பல வெற்றிப் படங்களை கொடுத்தார். சில படங்களை தயாரித்தவர். சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள சரத்குமார், இப்போதும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது, முதலில் உடம்பை ஆரோக்கியமா வச்சிக்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். சினிமாத்துறைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் அது ரொம்ப அவசியம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் மன வலிமையும் இருக்கும்.
நான் எந்த பள்ளிக்கூடத்துக்கும் கலை பயணத்திற்காக செல்லவில்லை. யதார்த்தமாக என் மனதில் ஒரு கதாபாத்திரம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என மனதில் தோன்றியதை நடிச்சுட்டு இருக்கேன். அதை செதுக்கிய பெருமை பல இயக்குனர்களுக்கு உண்டு. நான் ஒரு செதுக்கப்பட்ட கலைஞன்.
ஆரம்ப காலகட்டத்தில் என்னை கதாநாயனாக முதலில் இயக்கியவர் செந்தில்நாதன். பாலைவன பறவைகள் படத்தில் வில்லனாக இருந்த என்னை அவர்தான் கதாநாயகன் ஆக்கினார். அவர் சிறந்த இயக்குனர். அப்புறம் இயக்குனர் மணிவாசகம் அவரது இயக்கத்தில் வெளியான தங்கமான தங்கச்சி ஒரு வெற்றி படம்தான்.
அப்புறம் கட்டபொம்மன் படம் என எல்லாமே சக்சஸ் தான். அப்புறம்தான் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் என்னை உச்சத்துக்கே கொண்டு போனார் இயக்குனர் விக்ரமனும் அப்படித்தான். நடிகர்கள் திரைப்படங்களை தயாரிப்பது என்பது, என்னதான் நாம் பிளானிங் பண்ணினாலும் இங்கே என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்.
சொந்தமாக திரைப்படங்கள் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் நல்ல பாம்பாய் பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன் என்றுதான் சொல்லுவேன். அது புரியாத ஒரு பிசினஸ். டெய்லி அந்த லிஸ்ட்டை போட்டு கணக்கு பார்க்கிறது பெரிய விஷயம். முதல்ல மல்லிகைப்பூ 50 ரூபா போட்டிருப்பான். கீழே ஜாஸ்மின் 100 ரூபான்னு போட்டிருப்பான். இரண்டும் ஒன்றுதான் என கண்டுபிடிக்கிறதே ஒரு கலை என்று அந்த நேர்காணலில் நடிகர் சரத்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





