தமிழ் சினிமாவில் 1990களில் பல படங்களில் நாயகனாக நடித்தவர் சரவணன். சந்தோசம் பார்வதி என்னை பாரடி தாய்மனசு பொண்டாட்டி ராஜ்யம் அபிராமி சூரியன் சந்திரன் தம்பிதுரை உள்ளிட்ட படங்களில் சரவணன் ஹீரோவாக நடித்தவர். அப்போது அவரது படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சரவணன் நடிக்க படங்களில் வாய்ப்பு இல்லை. பிறகு 2007ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக செவ்வாழை கேரக்டரில் நடித்து சரவணன் ரீ என்ட்ரி தந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல கம்பேக் தந்தது. இப்போது தொடர்ந்து பல படங்களில் சரவணன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரவணன் கூறியதாவது, என்னுடைய முதல் மனைவி என் மீது மவுலிவாக்கம் போலீசில் புகார் தந்துள்ளார். நான் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறியிருக்கிறார். நான் 2வது மனைவியுடன் 12 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.
என் பையனுக்கு 9 வயதாகிறது. 4ம் வகுப்பு படிக்கிறான். 12 வருஷமா எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு இப்போது என் மீது கேஸ் கொடுத்திருக்கிறார். நான் கொலை முயற்சி செய்வதாக ஹாட் நியூஸ் போயிட்டு இருக்குது. அதெல்லாம் இல்லை. என் மகனை விட்டுட்டு போய் ஜெயில்ல என்னால் களி திங்க முடியாது.
அந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் எதுவும் இல்லே. என்னால் அவங்க உயிருக்கு எல்லாம் எந்த பிரச்னையும் வராது என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். அப்புறம் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். என்னை நம்பி என்கூட ஒரு பெண் இருக்கிறார். நான் அமைதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன்.
என்னிடம் இருந்து பணத்தை அபகரிக்க என் முதல் மனைவி முயற்சிகள் செய்கிறார். நான் அவர் மீது கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறேன். நான் அவரிடம் விவாகரத்து கேட்டுள்ளேன். அவர் ஜீவனாம்சம் கேட்டிருக்கிறார். கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. மாதம் 1 லட்சம் ரூபாய் கேட்கிறார். நான் தர முடியாது என்று அப்பீல் செய்திருக்கிறேன் என்று நடிகர் சரவணன் கூறியிருக்கிறார்.





