தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் சில நடிகர்கள் வெகு சீக்கிரமாக ஹீரோக்களாக மாறிவிடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூரியும் ஒருவர். விடுதலை கொட்டுக்காளி கருடன் மாமன் படங்களை தொடர்ந்து அவர் இப்போது மண்டாடி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நடிகர் சசிக்குமார் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. நடிகர் சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன் நாடோடிகள் 2 பிரம்மன் கொம்பு வெச்ச சிங்கம் உடன் பிறப்பே போராளி உள்ளிட்ட படங்களில் நடிகர் சூரி காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் படத்தில் சூரிதான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. சசிக்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் என்ற படத்தை இயக்கியவர் சரவணன். இவர் பத்திரிகையாளராக இருந்து பிறகு சினிமா இயக்குனராக மாறியவர். நந்தன் படத்தில் நடிகர் சசிகுமார் மாறுபட்ட கேரக்டரில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் சரவணன் எழுதிய சங்காரம் என்ற நாவல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் நடிகர்கள் சசிகுமார், சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, இயக்குனர் சரவணன் என் நண்பர் மட்டுமல்ல. இன்னும் எனக்கு ஸ்பெஷலானவர். அவர் தனக்காக எதுவும் எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை. அவரை கடந்த 2010ம் ஆண்டில் நான் சந்தித்தேன். அன்று அறிமுகமான நட்பு இன்று வரை எங்களுக்குள் தொடர்கிறது.
எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னுடன் தோளுக்கு தோளாக நின்று உதவுபவர். நான் மனதளவில் உடைந்து போயிருந்த போது ஆறுதல் சொல்லி என்னை தேற்றியவர் சரவணன் தான். சங்காரம் நாவலை படித்த பிறகு இது நன்றாக இருக்கிறது. இதை திரைப்படமாக உருவாக்குவோம். இந்த கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று இயக்குனர் சரவணனிடம் சொன்னேன்.
உடனே அவர் இதில் சூரி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கேரக்டருக்கு சூரி என்றே பெயர் வைத்திருக்கிறேன் என்று கூறினார். நிச்சயமாக இந்த நாவல் திரைப்படமாக உருவானால் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுப்பிரமணியபுரம் படத்தை போல் இந்த சங்காரம் நாவலும் படமாக உருவாகி வெற்றி பெறும். என்னை பொறுத்தவரை சங்காரம் நாவலை ஒரு திரைக்கதை புத்தகமாகதான் நான் பார்க்கிறேன் என்று சசிகுமார் அந்த மேடையில் பேசியிருக்கிறார். இதன் மூலம் நடிகர் சசிகுமார் நடிக்க வேண்டிய ஹீரோ கேரக்டரில் நடிகர் சூரி நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





