நடிகர் கவுண்டமணி, தமிழ் சினிமாவில் காமெடி கிங் என புகழப்படுபவர். பல காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி இடத்தை யாராலும் நெருங்கிவிட முடியாது. காரணம் அவரது நடிப்பும், நடனமும், நக்கலான பேச்சும் அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்த நடிப்பை, காமெடியை மிமிக்ரி செய்யலாமே தவிர அவராக நடித்து பெயர் வாங்கிவிட முடியாது.
தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து 2010 வரை 30 ஆண்டுகளில் கவுண்டமணி நடிப்பில் பல படங்கள் வெற்றிப்படங்களாக இருந்திருக்கின்றன. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், சரத்குமார், அஜீத், விஜய், தனுஷ் வரை பல முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள கவுண்டமணி, எந்த நடிகருடன் கூட்டணி அமைத்தாலும் அது ஹிட் படம்தான்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் – கவுண்டமணி கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே தனியான ஒரு ஸ்பெஷல் வரவேற்பு இருந்து வருகிறது. இருவருமே கோவையை சேர்ந்தவர்கள் என்பதும், இருவருமே ஒரே விதமான நக்கல், நையாண்டி, எகத்தாளம் பேசுபவர்களாலும், குறிப்பாக கோவை குசும்பு என்று சொல்வதை இருவருமே வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
அதனால் சத்யராஜ் – கவுண்டமணி இருவரும் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். பெரும்பாலும் சத்யராஜின் மாமா, சித்தப்பா, நண்பர் போன்ற கேரக்டரில்தான் கவுண்டமணி நடித்திருப்பார். அதனால் இருவரும் படம் முழுக்க செய்யும் கலாட்டாவே படத்தை பெரிய அளவில் ரசிக்கும்படி செய்துவிடுகிறது.
ஆனால் நடிகர் கவுண்டமணி, தன் குடும்பம் குறித்தும் தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் பொதுவெளியில் பேசவும் மாட்டார். தன்னை காட்டிக்கொள்ளவும் மாட்டார். திரைப்பட விழாக்களில் கூட மிகவும் கட்டாயம் என்றால் மட்டுமே கலந்துக்கொள்வார். குறிப்பாக செய்தியாளர்களை சந்திப்பது, பிரஸ்மீட்டிங் வைப்பது, பேட்டிகள் தருவது என்பதை முற்றிலும் தவிர்த்து விடுவார். அவரது நேர்காணல், பேட்டி என எதையுமே டிவி சேனல்களில், பத்திரிகைகளில் காண முடியாது.
இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சத்யராஜ் கூறியிருப்பதாவது, கவுண்டமணியிடம் பத்திரிகைகளுக்கு ஏன் பேட்டி தருவதில்லை எனக் கேட்டால், என்னுடைய பேட்டி நாட்டுக்கு தேவை இல்லாதது. நீ கொடுக்கிற காசுக்கு சினிமாவில் நான் சிரிக்க வைக்கிறேனா? அதை மட்டும் பாரு. சிரிச்சா சிரி, சிரிக்கலைன்னா போ. அதை தாண்டி என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்க ஒண்ணும் இல்ல, அது உனக்கும் அவசியமும் இல்லே, என்று நக்கலாக கூறியிருக்கிறார் கவுண்டமணி.





