இந்தி சினிமா உலகில் கொண்டாடப்படும் ஒரு பிரபல நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்கள் அதிகரித்த நிலையில் பதான், ஜவான் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை தட்டித் தூக்கியவர் நடிகர் ஷாருக்கான். அதில் ஜவான் படத்தை நம்மூர் இயக்குனர் அட்லி இயக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
ஷாருக்கான் தமிழில் சில படங்களில் நடித்திருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உயிரே, கமல்ஹாசனுடன் ஹேராம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்வாலியா லே ஜஹாங்கே என்ற படம் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்ற படமாகும்.
வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடைந்த அனைவருமே எடுத்தவுடனே அந்த இடங்களுக்கு வந்துவிடுவது இல்லை. வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பலவித போராட்டங்களை கடந்து, அவமானங்களை சந்தித்து பல தோல்விகளை கடந்துதான் பிறகு உச்சத்தை தொட்டிருக்கின்றனர்.
அதே போல் பாலிவுட் ஸ்டார் நடிகராக உள்ள ஷாருக்கானும் ஆரம்பத்தில் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை ஏமாற்றங்களை சந்தித்தவர். சினிமாவில் சாதிப்பதற்கு முன் பல துன்பங்களை எதிர்கொண்டிருக்கிறார். அதுகுறித்து சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தோல்விகளுக்காக ஒருநாளும் அழுவது கூடாது. அதை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை இப்போது நினைக்கும் போது மிகவும் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். ஆனால் அதை யாரிடமும் வெளிக்காட்டியது இல்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வர கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது. அப்படி நம்பவும் கூடாது. வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூறக்கூடாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை தந்திருக்கிறார்.





