இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்க்கையில் தந்தை எனப்படும் ஒரு பொறுப்பு குடும்பத்தை காக்கும் ஒரு தனி மனிதனின் உழைப்பு வலிமை பொறுமை பெற்ற பிள்ளைகளை காப்பாற்றி படிக்க வைத்து அவர்களின் உன்னத நிலைக்கு உதவும் கடமை என தந்தைகள் எப்போதும் போற்றப்பட வேண்டும் என்பதை இந்த நாள் அறிவுறுத்துகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பிள்ளைகள் தங்களது அப்பாவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது பரிசுகளை வழங்குவது அவர்களை பெருமைப்படுத்தும் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிடுவது வழக்கமாக உள்ளது.
மறைந்த நடிகர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியல் களத்தில் உள்ளார். இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தையர் தினமான இன்று தனது அப்பா குறித்து சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில் நடிகர் சண்முக பாண்டியன் கூறியிருப்பதாவது, உங்கள் மீதான வியப்பும் மரியாதையும் எப்போதும் குறைந்ததில்லை. அன்றும் இன்றும் என்றும் என் ஹீரோ நீங்கள் மட்டும்தான். இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. ஒரு நாள் கூட உங்களை நினைக்காமல் கடந்து போனதில்லை என்று அதில் சண்முக பாண்டியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதே போல் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் மகள் நடிகை மற்றும் பாடகியாக உள்ள ஸ்ருதிஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, எனக்கு மிகவும் பிடித்த மனிதர். எப்போதும் என்னுடைய நம்பர் 1 நீங்கள்தான். இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. ஐ லவ் யூ என்று ஸ்ருதிஹாசன் அதில் பதிவிட்டுள்ளார்.
தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட இதே நாளில் இன்று உலக யோகா தினமும் கடைபிடிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் பல முக்கிய திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். தந்தையர் தினமும் உலக யோகா தினமும் ஒரே நாளில் இன்று அமைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





