தமிழ் சினிமாவில் நடித்தால் கிடைக்கும் நல்ல அங்கீகாரம், மற்ற மொழி படங்களில் நடிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. தமிழில் சில படங்களில் நடித்து பெயர், புகழ் பெற்ற நடிகர்,. நடிகையர் தான் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அடுத்தடுத்த நிலையில் நடிக்க சென்று பெரிய ஸ்டார்களாக மாறி விடுகின்றனர். தமிழில் புகழ்பெற்ற நயன்தாரா, இன்று பாலிவுட் நாயகியாக மாறி இருப்பது ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
ஆனால், நடிகைகளை போல மற்ற மொழிகளில் நடிகர்களை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்வதில்லை. நடிகைகளை பொருத்த வரை அவர்களது அழகும், கிளாமரும் எளிதில் ரசிகர்களை வசப்படுத்தி விடுகிறது. ஆனால் திறமையும், ரசிகர்களை கவர மாஸ் இருந்தால் மட்டுமே, மற்ற மொழி படங்களில் நடிக்க நடிகர்களுக்கு பட வாய்பபுகளும், வரவேற்பும் கிடைக்கும்.
சமீபத்தில் வெளியான படம், சித்தா. நடிகர் சித்தார்த் நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் பலத்த வரவேற்பை பெற்ற படமாக, தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பிரமோசனுக்காக பெங்களூரு சென்ற போதுதான், பத்திரிகையாளர் சந்திப்பில் சித்தார்த் கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்டது, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், காவிரி பிரச்னையால் இந்த தகாத சம்பவம் நடந்துவிட்டதாக கன்னட திரையுலகம் சார்ந்த நடிகர்கள் பிரகாஜ்ராஜ், சிவராஜ்குமார் போன்றோர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
சித்தா படம், மன உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சித்தப்பா – மகள் இடையிலான அன்பை, பாசத்தை, பரிதவிப்பை வெளிப்படுத்தும் சிறந்த படமாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியான இப்படம், தெலுங்கில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், நடிகர் சித்தார்த் நடித்த படங்களுக்கு தெலுங்கில் இதுவரை பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. சித்தார்த் படங்களை எல்லாம் யார் பார்ப்பாங்க, என்ற மோசமான விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதனால் தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் மட்டுமே சித்தா ரிலீஸ் ஆன நிலையில், நாளை (6ம் தேதி) ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சித்தார்த், என் படத்தை யார் பார்ப்பார்கள் என மோசமான விமர்சனம் காரணமாக இந்த படம் மற்ற மொழிகளில் வெளியாகியும், தெலுங்கில் வெளியாக தாமதமாகி விட்டது. சித்தார்த் படங்களை யார் பார்ப்பார்கள் என்ற விமர்சனம் இருந்தாலும், எனக்காக யாரும் இந்த படத்தை பார்க்க வேண்டாம். சினிமாவை விரும்புபவர்கள் இந்த படத்தை கட்டாயம் பாருங்கள். ஏனென்றால், கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.





