தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என்ற புகழுக்கு உரியவர் டிஆர் எனப்படுகிற டி ராஜேந்தர். 1980களில் தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு நடிகர், இயக்குனர். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தியேட்டர்களில் திருவிழா கொண்டாடின. குறிப்பாக உடன் நடிக்கும் பெண்களை தொடாமல் நடிக்கும் அவரது உயர்ந்த பண்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் சிம்பு என்கிற சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமா பயணத்தில் தனது 40வது நிறைவு ஆண்டை கொண்டாடி வருகிறார். காதல் அழிவதில்லை படத்தில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார். ஆனால் காதல் தோல்வி, தயாரிப்பாளர்களிடம் பிரச்னை, படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற பிரச்னைகளால் சிம்புவுக்கு சினிமா பீல்டில் அவப்பெயர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இதனால் பட வாய்ப்புகளை இழந்தார்.
ஆனால் 2022ம் ஆண்டில் மாநாடு படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு, தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்துதல, ஈஸ்வரன் என அவர் நடித்த படங்களை தொடர்ந்து இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
நடிகர் சிம்புவும், நடிகர் தனுஷூம் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் மறைமுகமாக ஒரு போட்டி இருந்து வந்ததுண்டு. ஆனால் தனுஷ் அளவுக்கு சிம்பு சினிமாவில் அதிக ஆர்வமும் கவனமும் செலுத்தவில்லை. இதுவரை தனுஷ் 4 படங்களை இயக்கி உள்ளார். அதில் 2 படங்கள் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இன்னும் 2 படங்கள் வெளிவர உள்ளன.
இந்த சூழலில், நடிகர் சிம்புவும் இயக்குனராக முடிவு செய்துவிட்டார். மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இது அவர் நடிக்கும் 50வது படமாகவும் இருக்கும். அதாவது தனது 50வது படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளார். அவரே தயாரிப்பு நிறுவனமும் துவங்கி இருப்பதால் அவரே அந்த படத்தை தயாரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. தனுஷூக்கு போட்டியாக சிம்புவும் இயக்குனராக களத்தில் குதிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





