நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளிவந்த அயலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஓடவில்லை. எனினும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள அமரன் படமும், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சிங்க நடை படமும் பெரிய வெற்றிப் படங்களாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனை பொருத்த வரை தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தவர். அதற்கு முக்கிய காரணம், அவரது பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றமும், யதார்த்தமான பேச்சும், ஆரம்ப கால ரஜினியை பிரதிபலிக்கிற அவரது நடிப்பும்தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான், அவரை அதிரடியாக முன்னிலை நாயகனாக மாற்றியது.
பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில், முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் தன்னை முன்னிலை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை துவக்கத்திலேயே தெளிவாக புரிந்து்கொண்ட சிவகார்த்திகேயன், அந்த யுக்தியை பயன்படுத்தி வெகு சுலபமாக, வெற்றி பெற்றார். அதே வேளையில் அவரது அயராத உழைப்பும், சின்சியாரிட்டியும் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததும் உண்மையே.
இன்று திருத்துறைப் பூண்டியில், விவசாயிகள் சார்பில் உலக நெல் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டு, விவசாயிகளில் ஒருவராக கழுத்தில் பச்சை துண்டுடன் காணப்பட்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், 174 வகையான பாரம்பரியமான நெல் விதைகளை தேடி கண்டுபிடித்து மீட்டெடுத்து இயற்கை விவசாயத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருக்கின்றனர். அதை யொட்டி, இன்று திருத்துறைப் பூண்டியில் உலக நெல் திருவிழா இன்று நடந்தது. இதில் வந்து கலந்துக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஒரு இயற்கை விவசாய புரட்சியாக நான் பார்க்கிறேன்.
ஏனென்றால் அழிந்து போன பாரம்பரிய நெல் விதைகளை ஒரு தனி ஆளாக மீட்டெடுத்து அதற்கான விழாவை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்டேன். இங்கு வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. ஆனால் இந்த நல்ல விஷயத்தை வெளியுலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. இந்த நெல் திருவிழாவை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும், என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.





