தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடித்து அறிமுகமான அவர், இப்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில், முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அரசியலுக்கு செல்லும் நடிகர் விஜய் இடத்தில், சிவகார்த்திகேயனை சொல்லும் அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்த வரை, அவரது நடிப்பில் ரஜினியின் ஸ்டைல் அதிகமாக வெளிப்படுகிறது. இதை சிவகார்த்திகேயனே பலமுறை ஒத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் ரஜினியின் மிக தீவிரமான ரசிகர். ரஜினி, விஜயை போல அடுத்தகட்டமாக பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் தியேட்டர்களுக்கு வரவழைக்கக் கூடிய நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான கடைசி படம் அயலான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், வருகிற 31ம் தேதி, தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அமரன் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முகுந்த் கேரக்டரில் ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அமரன் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். அப்போது அமரன் படம் குறித்த முக்கிய தகவல்களை படக்குழுவினர் கூறி, ரசிகர்களுக்கு படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பங்கேற்ற அமரன் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, அமரன் படம் உருவாவதற்கு முக்கிய காரணம், நடிகர் கமல்ஹாசன் கொடுத்த தைரியம்தான். நான் நடிக்க இந்த படத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இந்த படம்தான் என்னை நடிக்க தேர்ந்தெடுத்தது. மேஜர் முகுந்தன் ஒரு சூப்பர் ஹீரோ. அவரது வாழ்க்கையை திரையில் சொல்வதற்கு எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இது அமைந்தது என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.





