சினிமாவில் காதல் தோல்வி காட்சிகளில் ஹீரோக்கள் உருக்கமான காட்சிகளில் நடிப்பது வழக்கம். நாயகி நாயகனை காதலிப்பதாக பொய்யாக நடித்து ஏமாற்றி விடுவார். அல்லது நாயகியின் அப்பா அந்த காதலுக்கு வில்லனாக இருந்து நாயகனுடன் சேர விடாமல் தடுத்து வேறு ஒரு நபருக்கு, குறிப்பாக வில்லனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்து விடுவார். வழக்கமாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற காதல் கதைகளே அதிகம்.
ஆனால் நிஜத்திலும் காதல் தோல்விகளை சந்தித்த நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் காதல் தோல்வி குறித்து ஒரு நேர்காணலில் லேசாக சொல்லி இருந்தாலும் அவர் யார் போன்ற விவரங்களை தர மறுத்துவிட்டார். நடிகர் கமலுக்கும் இளம் வயதில் காதல் தோல்வி உண்டு.
இப்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் காதல் தோல்வி ஏற்பட்ட தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவர் தனது அக்கா மகளை தான் திருமணம் செய்திருக்கிறார். அந்த தம்பதிக்கு ஒரு மகள் 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் பிறந்த தனது 3வது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நாளை நாடு முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் விரும்பும் பெண்ணை அல்லது ஆணை நேரில் சந்தித்து தங்களது காதலை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தினமாக அமைந்துள்ளது. இதற்காக காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த தயாராகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் காதல் தோல்வி அடைந்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஒரு பெண்ணை மிக தீவிரமாக காதலித்திருக்கிறார். ஆனால் ஒரு தலைக் காதல்தான். அந்த பெண்ணிடம் தனது காதலை அவர் நேரில் சென்று கூறவில்லை. அதனால் அவரது காதலும் கைகூடவில்லை. ஒரு கட்டத்தில் அந்த பெண் தன் காதலருடன் சென்றுவிட்டதால் காதல் தோல்வியால் துவண்டு போயிருக்கிறார் எஸ்கே.
இதையடுத்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு விஜய் டிவியில் காம்பியராக இருந்த போது, ஒருமுறை ஷாப்பிங் மால் ஒன்றில் தனது முன்னாள் காதலியை சிவகார்த்திகேயன் ஏதேச்சையாக நேரில் பார்த்திருக்கிறார். ஆனால் அப்போது முன்பு காதலித்த அந்த நபரோடு இல்லாமல் வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் வந்திருக்கிறார். அதனால் நமக்கு கிடைக்காத இந்த பெண், அவனுக்கும் கிடைக்கவில்லை என்று சந்தோஷப்பட்டதாக ஒரு நேர்காணலில் சிவகார்த்திகேயன் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.





