தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கியவர் டைரக்டர் எஸ்ஜே சூர்யா. நடிகர்கள் அஜீத்குமார், விஜய் இருவருக்குமே இந்த படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அவர்களது சினிமா பயணத்தில் அமைந்தது. இயக்குனர் சூர்யாவும் இதில், ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.
அடுத்து நியூ, அன்பே ஆருயிரே ஆகிய படங்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, தொடர்ந்து நடிப்பில் தீவிர ஆர்வம் காட்டினார். கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், திடீரென தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். இயக்குனராக, நடிகராக ஜொலிக்க வேண்டிய அவரை சில ஆண்டுகளில் ரசிகர்களே மறந்து விடும் நிலைக்கு வந்து விட்டனர்.
அதன்பிறகு மீண்டும் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா படிப்படியாக நடிப்பில், மீண்டும் தனது பழைய பெர்மான்ஸ்க்கு வந்தார். இசை, மெர்சல், ஸ்பைடர், மான்ஸ்டர், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்து, நடிப்பு அரக்கனாக தன்னை மீண்டும் நிரூபித்தார். இப்போது, எஸ்ஜே சூர்யா இந்தியன் 2, வீரதீர சூரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே நடிகர் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு திறனை பார்த்து அசந்து போன மலையாள படவுலகத்தில் இருந்து,அவருக்கு அழைப்பு வந்துள்ளது. முதன்முறையாக மலையாளத்தில் இயக்குனர் விபின்தாஸ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் மற்றொரு நடிப்பு அரக்கனாக இருப்பவர்தான் பகத் பாசில், தமிழிலும் அவர் அதை நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக வேலைக்காரன், மாமன்னன், விக்ரம் போன்ற படங்களில் தனது நடிப்பில் ரசிகர்களை தெறிக்க விட்டவர் பகத் பாசில். தற்போது அவரது நடிப்பில் வெளிவந்த ஆவேசம் படமும் ரூ. 150 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
விபின் தாஸ் இயக்கத்தில், பகத் பாசில் ஹீரோவாக நடிக்கும் இந்த மலையாள படத்தில், வில்லனாக அறிமுகமாகிறார் எஸ்ஜே சூர்யா. நடிப்புக்கு தீனி போடும் மலையாள படவுலகம், எஸ்ஜே சூர்யா போன்ற பிறவிக் கலைஞர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், இன்னும் பல படங்களில் மலையாளத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. தவிர, இரண்டு நடிப்பு அரக்கன்கள் நடிப்பில் உருவாகும் விபின்தாஸ் படமும் வேற லெவலில் தரமான சம்பவமாக இருக்கும் என, ரசிகர்கள் இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.





