ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராசி. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். விக்ராந்த், துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூட் ஜம்வால் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்றுள்ளார்கள். முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசை அமைப்பில் ஏற்கனவே படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.
இப்படியான சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசி இருப்பதாவது, முதலில் அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாள்தோறும் மாணவர்கள் இங்கு வருவார்களா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் நான் சாய்ராம் கல்லூரிக்கு வழக்கமாக வந்து கொண்டிருக்கிறேன்.
சொல்லப்போனால் இசை வெளியீட்டு விழாவிற்கு என்று, ஒரு புதிய கோர்சை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த மேடையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். ஏழாம் அறிவு திரைப்படம் வெளியாக இருக்கும்போது நான் தான் அந்த நிகழ்ச்சிக்கு ஆங்கராக இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் வேறு ஒரு ஹீரோ, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக கூறி விட்டார்கள்.
அதற்கு பதில் ஸ்கிரிப்ட்டை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள். கோட் திரைப்படத்தில் விஜய் சார் உடன் நடித்த பிறகு, விஜய் சாரினால் உத்வேகம் அளிக்கப்படும் அந்த காட்சியை பார்த்தேன். ஆனால் உடனடியாக பலரும் என்னை குட்டி தளபதி திடீர் தளபதி என்று அழைத்தார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான்.
மான் கராத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒருமுறை முருகதாஸ் சார் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், முருகதாஸ் சார் மற்றும் சங்கர் சார் இயக்கத்தில் நான் ஒரு நாள் நடிப்பேன் என்று கூறியிருந்தேன்.
ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்திருக்கிறது என்று படக்குழுவை அழைத்து பாராட்டினால் இவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்கிறார்கள். நல்லது செய்ய நான் ஏன் யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் மதராசி திரைப்படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்தனர். வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





