தமிழ் சினிமாவில் அஜீத்குமார் சிம்ரன் நடித்த வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது. இந்த 2 படங்களும் அஜீத்குமார் விஜய் சிம்ரன் ஜோதிகா ஆகியோருக்கு திருப்பு முனையாக இருந்தது.
அதன்பிறகு அன்பே ஆருயிரே நியூ கள்வனின் காதலி வியாபாரி திருமகன் என பல படங்களில் நடித்த எஸ்ஜே சூர்யா ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போது 2வது சுற்றில் வில்லன் கேரக்டரில் அசத்தி வருகிறார்.
இசை மான்ஸ்டர் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் மாநாடு ராயன் கேம் சேஞ்சர் இந்தியன் 2 ஸ்பைடர் மெர்சல் என பல படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா அடுத்து வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான எல்ஐகே படத்திலும் முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியதாவது, நான் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விடுவேன். ஒரு இயக்குனர் என்னிடம் வந்து நான்தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார்.
நான் என் கேரக்டரில் சில மாற்றங்கள் சொன்னேன். அதை அவர் செய்தார் மீண்டும் மாற்றங்கள் சொன்னேன். அதையும் அவர் செய்தார். பின்னர் நானே அவரிடம், எனக்கொரு வாழ்க்கை இருக்கிறது. அதை நோக்கி போகிறேன். நான்தான் வேண்டும் என்று சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள். நான் இல்லை என்றாலும் பரவாயில்லை.
இந்த படத்தை நீங்கள் விரும்பிய மாதிரி எடுங்கள் என்று என் மனதில் பட்டதை சொல்லி அவரை அனுப்பினேன். அந்த படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த படம் தான் லப்பர் பந்து. ஒருவேளை நான் சுயநலமாக முடிவு செய்திருந்தால் அதற்குள் சில திருத்தங்கள் சொல்லி படத்தில் நான் நடித்து இருக்க முடியும். ஆனால் எனக்குள் இருக்கும் சில விஷயங்கள் அதை அனுமதிக்கவில்லை என்று நடிகர் எஸ்ஜே சூர்யா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





