நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேட்டையன். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தசெ ஞானவேல் இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் கேமியோ ரோலில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்துடன் மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால் தொழில்நுட்ப ரீதியான இந்த பணிகள் முடிவடைய அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
வேட்டையன் படம் ரிலீஸ் தேதி வரும் அக்டோபர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில வாரங்கள் கழித்து ரிலீஸ் செய்தாலும் தவறில்லை என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்சன்ஸ், படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல் கூறிய நிலையிலும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
வேட்டையன் படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் இன்னும் நிறைய நடக்க வேண்டியிருப்பதால், ரஜினியின் பிடிவாதம் காரணமாக 7 இடங்களில் இந்த தொழில்நுட்ப பணிகளை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை போனில் அழைத்து பேசியுள்ளார்.
ஏனெனில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் அடிப்படையில் அழைத்து, கங்குவா படத்தை அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், வேட்டையன் ரிலீஸ் குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். இரண்டு படங்களுமே பெரிய படம், இரண்டுமே ஒன்றாகவே வந்து வெற்றி பெறட்டுமே என்று பிடி கொடுக்காமல் பேசி இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதையடுத்து வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்டது. இப்படி ரஜினி பிடிவாதம் காட்ட காரணம், விஜய் நடித்த தி கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு பின் வெளியாகும் பெரிய படம் வேட்டையன்தான். அதனால் விஜய்க்கு பதிலடி தரும் விதமாக வசூலிலும், வெற்றியிலும் வேட்டையன் முதலிடம் பெற்று, விஜய்க்கு நான் சளைத்தவர் இல்லை என நிரூபிக்கவே ரஜினி இப்படி பிடிவாதம் பிடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





