வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. அதன்பிறகு பல படங்களில் பரோட்டா சூரி என்றே அவர் டைட்டில் கார்டில் போடப்பட்டார். தொடர்ந்து காமெடி ரோலில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சூரிக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.
காமெடியில் முன்னணி நடிகராக மாறிய சூரியை இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை படத்தின் மூலம் நாயகனாக மாற்றினார். கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் போலீஸ் ஜீப் டிரைவராக சூரியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கொஞ்சம் கூட பழைய காமெடி நடிப்பு வாசமின்றி அழுத்தமான நடிப்பை சூரி வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் அடுத்து விடுதலை 2 படத்தில் நடிகர் சூரிக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை. அதே போல் அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்த கருடன் படமும் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த படம் கொட்டுக்காளி. கமர்ஷியலாக இந்த படம் ரசிகர்களிடம் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் படம், 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த வெற்றிப் படமாக அமைந்தது.
மாமன் படத்தின் கதை திரைக்தை வசனத்தை எழுதியவர் நடிகர் சூரி தான். இயக்குனர் மட்டுமே பிரசாந்த் பாண்டியராஜன். அதனால் இந்த படத்தில் நடிகராக மட்டுமின்றி ஒரு படைப்பாளியாகவும் சூரி ஜெயித்திருந்தார். குடும்ப கதையில் அவரது நடிப்பும் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மண்டாடி படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகர் சூரி தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் நிறைய வருகின்றனர். சாட்டிலைட் ஓடிடியிலும் சூரி படங்கள் நல்ல விலைக்கு போவதால், அவர் தனது சம்பளத்தை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 15 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. 2 படம்தானே ஹிட் கொடுத்துள்ளார், அதற்குள் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகுமா, என சில தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுவதாக தெரிய வந்துள்ளது.





