தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் கதாநாயகனாக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இத்தனைக்கும் அவர் மூன்றே மூன்று திரைப்படங்களில் மட்டும் தான் பங்களித்திருக்கிறார். அதில் ஒன்று கோமாளி திரைப்படம். இதில் அவர் இயக்குனராக அறிமுகமானார். ரவி மோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் கல்லா கட்டியது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு பிரேமில் மட்டும் வந்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அவர் இரண்டாவதாக லவ் டுடே என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தத் திரைப்படமும் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
நவீன யுகத்தில் பலரும் செல்போனில் மூழ்கியிருக்க காதலர்களுக்கு அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அங்கிருந்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதையும் சுவாரசியமாக பதிவு செய்து பிரதீப் ரங்கநாதன் கைத்தட்டலை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் முழுக்க முழுக்க நடிகராக மாறிய திரைப்படம் டிராகன்.
இந்த முறை அவர் இயக்கத்தை கைவிட்டு நடிகராக மாறியதால் பலருக்கும் அந்த திரைப்படத்தின் மீது ஒரு பார்வை இருந்தது. அதுவும் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இதில் இயக்குனராக இருந்ததால், டிராகனை தமிழ் திரையுலகம் எதிர்பார்த்தது. அதற்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று கல்லா கட்டியது.
பிரதீப் ரங்க நாதனின் இந்த மூன்று திரைப்படங்களுமே 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கின்றன. இப்படியான சூழலில் தற்போது டியூட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ஓடிடி தளத்தில் நல்ல ஒரு தொகைக்கு விற்பனை ஆகிவிட்டது. அதேபோல் டிஜிட்டலிலும் இந்த திரைப்படம் ஒரு பெரிய தொகைக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மைத்திரி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சரத்குமார் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு dude படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சைக்கிளில் அமர்ந்தபடி கைச் சட்டையை முறுக்கி விட்டு கம்பீரமாக காட்சி இருக்கிறார் சரத்குமார். சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





