காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சூரி இப்போது ஹீரோவாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் அடுத்ததாக மாமன் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான மாமன் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரண் சுவாசிகா பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான மாமன் படம் டிரெய்லர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் நடித்த சூரிக்கு அந்த படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து கருடன் படத்திலும் சொக்கன் கேரக்டரில் சூரியின் நடிப்பு அசத்தலாக இருந்தது. ஆனால் கொட்டுக்காளி படத்தில் சூரியின் நடிப்பு அவ்வளவாக ரசிகர்களிடம் எடுபடவில்லை. மாமன் படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தற்போது நடித்து வரும் படம் மண்டாடி. ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் மண்டாடி படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்க உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மண்டாடி படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். சுஹாஸ் வில்லனாக நடிக்கிறார். தமிழில் சூரி கதாநாயகனாக நடிக்கும் நிலையில் தெலுங்கில் சுஹாஸ் கதாநாயகனாகவும் சூரி வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி, இதை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சுஹாஸ் மண்டாடி படம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சுஹாஸ் கூறியிருப்பதாவது, நான் நடிக்க உள்ள தமிழ் படம் மண்டாடி பற்றிய ஒரு சிறிய விளக்கம் இது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த படத்தில் நான் வில்லனாக மட்டுமே நடிக்கிறேன். நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்று விளக்கம் தந்துள்ளார். அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கிலும் சூரிதான் நாயகன் என தெளிவுபடுத்தியுள்ளார்.





