தற்போது வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) சார்பில் 6,500 கிலோ மீட்டருக்கு பிரம்மாண்டமான கடற்கரை சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. குஜராத் மேற்கு வங்கத்தில் தொடங்கிய மாரத்தான் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களைக் கடந்து பிப்ரவரி 22ம் தேதி கொச்சியில் நிறைவடைகிறது.
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு, தண்ணீர் சிக்கனம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சைக்கிள் மாரத்தான் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற சிஐஎஸ்எப் வீரர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் வந்தடைந்தனர். அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி அங்குள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டார். நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல மாதங்களாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அந்த படப்படிப்பு நடந்து வருகிறது. அதனால் தேவிபட்டினம் பகுதியில் உள்ள விவேகானந்தா வித்யாலாய பள்ளியில் நடந்த இந்த விழாவில் நடிகர் சூரியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் நடிகர் சூரி பேசியதாவது, நடிகர்கள் உண்மையான ஹீரோக்கள் இல்லை. நம் நாட்டின் பாதுகாப்புக்காக வலம் வரும் சிஐஎஸ்எப் வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். கடல்வழியாக போதைப்பொருள் ஊடுருவலை போலீசார் அதிகாரிகள் தடுத்தால் போதாது. நாமும் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இப்போது போதை கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மாணவ செல்வங்கள் போதையின் பாதையில் செல்லாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நடிகர் சூரி பேசினார்.
நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து பிறகு விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது நடிப்பில் வெளியான கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களை தொடர்ந்து இப்போது மண்டாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளார்.





