நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மாமன். இதுவரை 25 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மாமன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூரி தனியார் டிவி சேனலில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பஞ்சமி என்ற பெண் சிறந்த முறையில் நடனமாடினார். 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ள பஞ்சமி, அவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த வலிகள் நிறைந்த வாழ்க்கை குறித்து அந்த நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசினார். அப்போது என் 3 குழந்தைகளுக்கும் இன்னும் காது குத்தவில்லை என்று வருத்தமாக தெரிவித்தார்.
அதை கேட்டவுடன் நடிகர் சூரி, உங்கள் குழந்தைகளுக்கு நான் தாய் மாமனாக இருந்து 3 குழந்தைகளுக்கும் என் சொந்த செலவில் நானே காது குத்தும் விழாவை நடத்துகிறேன் என்று உறுதிமொழி தந்தார். அவர் சொன்னபடியே பஞ்சமியின் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் காதுகுத்து விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார். இது அவர் நடித்த மாமன் படத்தில் திரையில் வரும் காட்சியை போலவே நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பஞ்சமியின் குழந்தைகளுக்கு காதுகுத்தி மொட்டை அடித்து காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி பங்கேற்று தனது மடியில் தாய் மாமனாக அந்த குழந்தைகளை அமர வைத்து காது குத்தும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாமன் படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் உள்ளிட்ட சிலரும் பங்கேற்று அந்த குழந்தைகளை வாழ்த்தினர்.
சூரி செய்த இந்த தரமான சம்பவ வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் ஒரு ஹீரோவாக ஏழைப் பெண்ணின் 3 குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் காதுகுத்தி அந்த குழந்தைகளை தனது மடியில் அமர வைத்து ஒரு நிஜ தாய்மாமன் போலவே நடிகர் சூரி நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது.
வழக்கமாக விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சில ஹீரோக்கள் இப்படி ஸ்டண்ட் அடிப்பது வழக்கம்தான். ஆனால் நடிகர் சூரி யதார்த்தம் நிறைந்த மனிதராக இருப்பவர். சமீபத்தில் மாமன் படம் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட தன் ரசிகர்களை, நீங்கள் என் ரசிகர்களாக தம்பிகளாக இருக்க கூட தகுதியில்லாதவர்கள் என்று துணிச்சலாக பேசியவர்தான் சூரி. நல்ல கலைஞராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் இப்போது பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகர் சூரி.





