தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இயக்குனர் சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு வர்ணஜாலம் ஜூட் சதுரங்கம் நண்பன் பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதற்கு இடையே வெப் சீரிஸ் ஒன்றிலும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது 15 நாட்கள் காவலில் புழல் சிறையில் நடிகர் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதாவதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொகைன் பாக்கெட் நான் வாங்கினேன்.
அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் பார்ட்டி நடத்தினேன். பிரசாத்தை மட்டுமே எனக்கு தெரியும். அவர் என்னை வைத்து தீக்கிரை என்ற படத்தை தயாரித்துள்ளார். எனக்கு தர வேண்டிய 10 லட்சம் ரூபாயை நான் கேட்டபோது, போதைப் பொருள் தந்து அதை பழக வைத்தவர் பிரசாத் தான். பணம் கேட்கும் போதெல்லாம் எனக்கு கொகைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியதும் அவர்தான் என்று நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த சனிக்கிழமை நடத்திய கொகைன் பார்ட்டியில் கலந்துக்கொண்டவர்கள் யார் யார் என்ற தகவலை போலீசார் திரட்டியுள்ளனர். மேலும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. என்னை ஜாமீனில் விடுங்கள் என்றும் கோர்ட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் அழுது புலம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





