கடந்த சில மாதங்களாக பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இது 17 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சாயத்துதான். இப்போது, கோர்ட்டில் அதுதொடர்பாக வழக்கு நடக்கிறது என்று இயக்குநர் அமீர் சொன்ன ஒரு தகவலால், புதுப்பிக்கப்பட்டு விட்டது.
இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கி, பரபரப்பை ஏற்படுத்தியவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. நடந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, இயக்குநர் அமீர், தங்களிடம் இருந்து பணத்தை அபகரிக்க நாடகமாடுவதாக அபாண்டமாக பழிபோட்டு பேசியதும், அப்போது இழிவான வார்த்தைகளில் அவரை பேசியதும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக முன்னணி நடிகர்களாக உள்ள இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், சேரன், பாரதிராஜா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் வருத்தம் தெரிவிப்பதாக கூறி ஒதுங்கிக்கொண்டார். ஆனால் அவரை கொம்பு சீவி விட்டு அப்படி பேச அனுப்பியதே சிவக்குமார் குடும்பம்தான் என்பது வெட்டவெளிச்சமாக எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தது.
இதுவரையிலும் அமீர் பருத்திவீரன் படத்தை தயாரிக்க செலவு செய்த ரூ. 1.65 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது சிவக்குமார் குடும்பம். 17 ஆண்டுகளுக்கு முன் 1.65 கோடி என்பது இப்போது ரூ. 15 கோடிக்கு மேல் மதிப்பு வரும். ஆனால், அந்த பணத்துக்கு வட்டி கூட வேண்டாம். இப்போதைய பண மதிப்பிலும் வேண்டாம். அப்போது நான் செய்த ரூ. 1.65 கோடியை மட்டும் தந்தால் போதும் என்றுதான் அமீர் கேட்கிறார். இப்படி நேர்மையாக கேட்கும் ஒரு மனிதர் மீது அவர்கள், அபாண்டமாக பழிபோட்டு பேசி இருக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பாலா தயாரிப்பில், வணங்கான் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இருவரும் சேர்ந்துதான் அந்த படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில வாரங்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட சூர்யா, பின்பு பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் அருண் விஜய் நடித்தார்.
இப்படி வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்ட நிலையில், அந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக ரூ. 4 கோடி வரை செலவு செய்த வகையில், சூர்யாவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதுபற்றி பேசவோ, சூர்யா கண்டுகொள்ளவோ இல்லை. இப்படி ரூ. 4 கோடி நஷ்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்ட சூர்யாவுக்கு அமீருக்கு தர வேண்டிய ரூ. 1.65 கோடி ஒரு பெரிய விஷயமே இல்லை. இருந்தாலும், ஈகோ மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த பணத்தை தராமல் இருந்து வருகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.





