கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக தமிழில் பெரிய வெற்றிப் படங்களை தரமுடியாமல் திணறி வருகிறார் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றன. ஆனால் தியேட்டரில் வெளியான 10 படங்களும் படுதோல்வியை சந்தித்தன.
சிங்கம் 3 பசங்க 2 அஞ்சான் 24 காப்பான் என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி எதற்கும் துணிந்தவன் கங்குவா உள்ளிட்ட 10 படங்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து பலத்த ஏமாற்றத்தை தந்த படங்களாக இருந்துவிட்டன. அதிலும் நெருப்பு மாதிரி இருக்கும் என்று சூர்யாவே சிலாகித்து சொன்ன கங்குவா படத்தை ரசிகர்கள் மிக மோசமான விமர்சித்தனர்.
இந்த சூழலில் நடிகர் சூர்யா அவர் நடித்த நடிக்க உள்ள 3 படங்களை பெரிய மலையாக நம்பி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. வரும் மே 1ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடையே காணப்படுகிறது.
அதே போல் இப்போது தனது 45வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். திரிஷா சுவாதிகா ஷிவதா நட்டி யோகிபாபு மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, கோவையை தொடர்ந்து இப்போது சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தின் டம்மி ஆர்ஆர் எடிட் செய்த காப்பியை, சூர்யாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் போட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்த சூர்யா, அப்படியே மிரண்டு போயிருக்கிறார். நான் எதிர்பார்த்ததை விட படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டு கார்த்திக் சுப்பராஜை பாராட்டியும் இருக்கிறார்.
மிக விரைவில் நாம் மீண்டும் ஒரு படம் பண்ணுவோம் என்றும் இயக்குனரிடம் சூர்யா உறுதி தந்திருக்கிறார். அதனால் ரெட்ரோ படம் சூர்யாவுக்கு ஒரு பெரிய வெற்றியை தரும் பட்சத்தில், மீண்டும் கார்த்திக் சுப்பராஜூடன் சூர்யா இணைய அதிக வாய்ப்புள்ளது. வாடிவாசல் படத்துக்கு பிறகு கூட சூர்யா அப்படி ஒரு முடிவுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





