நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, நட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்திலேயே மிகப்பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

நிகழ்காலத்திற்கும், முந்தைய பிறவிக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தி இந்தப் படத்தை சிறுத்தை சிவா எடுத்து வருகிறார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வீடியோவின் கடைசியில் சூர்யா கூறும் நலமா பஞ்ச் டயலாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகியது.
இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் அடர்ந்த வனப்பகுதியில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட சூட்டிங் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துடன் சூட்டிங் பணிகளை முடிக்கும் சூர்யா, அடுத்ததாக சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணைகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த சூர்யா, தனது அடுத்தடுத்த படங்களுக்கு குறித்த அப்டேட்டை வெளியிட்டார். இதில் தற்போது நடித்து வரும் கங்குவா திரைப்படம், நீங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நன்றாக இருக்கும் என்று கூறினார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து முழுக்க முழுக்க ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்கப் போவதாகவும் சூர்யா தெரிவித்தார். இதன் பிறகு இரும்பு கை மாயாவி படத்தின் வேலைகள் நடைபெறும் என்றும், விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் முடிந்த பிறகு வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் படம் பண்ணப் போவதாகவும் தெரிவித்தார். இதனிடையே சூர்யா அடிக்கடி மும்பை சென்று வருவதால், அவர் இனிமேல் அங்கேயே செட்டில் ஆக போவதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பேசி இருக்கும் நடிகர், “நான் மும்பையில் செட்டில் ஆகவில்லை. நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். என் மகளும் மகனும் மட்டுமே மும்பையில் படிக்கிறார்கள். வாழ்க்கையில் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள தற்போது மாதவனுடன் கோல்ஃப் விளையாடுகிறேன். வாழ்க்கை என்பது வியாபாரத்தில் வெல்வதற்காக அல்ல, அது அப்பாவாகவும், நல்ல கணவராகவும் சிறந்த மகனாக இருப்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.





