தமிழ் சினிமாவில் காமெடி, காதல் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே மையப்படுத்தி தனது படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் சுந்தர் சி. அவ்வப்போது அரண்மனை 4 வரை தொடர்ந்து திகில் படங்களையும் தந்து ரசிகர்களுக்கு பயமுறுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது அரண்மனை 4 வசூலில் 100 கோடி ரூபாய் சாதனையை எட்டியுள்ளது.
சுந்தர் சி இயக்கிய படங்களில் ஆரம்பத்தில் இருந்தே சில பார்மூலாக்களை பாலோ அப் செய்து வருகிறார். நிச்சயம் இவரது படத்தில் காதல், காமெடி மையமாக இருக்கும். குறிப்பாக கதாநாயகிகளின் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். காவாலா பாடலால் ரசிகர்களை கிறங்கடித்த தமன்னாவை, அரண்மனை 4ல் நடிக்க வைத்தார். படமும் வசூலில் சாதனை படைத்தது.
சுந்தர் சி இயக்கிய ஆரம்ப கால படங்களில் முதலில் கவுண்டமணி, செந்தில் அதிக படங்களில் நடித்தனர். பிறகு வின்னர், கிரி உள்ளிட்ட சில படங்களில் வடிவேலு நடித்தார். அதன்பிறகு சுந்தர் சி படங்களில் சந்தானம், யோகிபாபு நடித்தனர். இப்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால், அரண்மனை 4 படத்தில் கூட யோகிபாபு பிரதான காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.
நடிகர் வடிவேலு, சுந்தர் சி படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு படத்தில், வடிவேலு கவனத்துக்கு கொண்டு செல்லாமல் அந்த படத்தில் சந்தானத்தை சுந்தர் சி நடிக்க வைத்திருந்தார். அதனால் பிரிவியூ ஷோ பார்த்த போது பயங்கர கடுப்பான வடிவேலு, சுந்தர் சியிடம் இதுகுறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு சுந்தர் சி படங்களில் வடிவேலு பிறகு பல ஆண்டுகளாக நடிக்கவே இல்லை.
ஆனால் இப்போது மீண்டும் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்துள்ளார். தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கி இப்போது வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் வடிவேலுவும் கலந்துக்கொண்டுள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுந்தர் சி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் வடிவேலு படம் முழுக்க வரும் கேரக்டர் தரப்பட்டு, அவருக்கு சுந்தர் சி அதிக முக்கியத்துவம் படத்தில் தந்துள்ளார். அதே நேரத்தில், இந்த படத்தில் நடிகர் யோகிபாபு சில காட்சிகளில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி விரும்புகிறார். ஆனால் ஏற்கனவே சந்தானம் நடித்த பஞ்சாயத்தால்தான் வடிவேலு இத்தனை ஆண்டுகளாக சுந்தர் சி படத்தில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள நிலையில், யோகிபாபுவை அழைக்கலாமா, வேண்டாமா, வடிவேலு ஒத்துக்கொள்வாரா என்று பயங்கர குழப்பத்தில் சுந்தர் சி இருந்து வருகிறார்.





